சமீபத்தில் சென்னையில் நடந்த மக்கள் தலைவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ராதாரவி பேசியதாவது, மக்கள் தலைவா என்ற இந்த படத்தில் ரவி மரியா தான் கதாநாயகன் என சொன்னார்கள். கதையின் நாயகன் என்பதை விட இந்தப் படத்தில் இளிச்சவாயன் அவர்தான்.
ஒன்றுமே தெரியாதவர் முதலமைச்சர் ஆகிறார். அவரை நான் எப்படி முதலமைச்சர் ஆக்குகிறேன் என்பதுதான் கதை. உண்மையில் இது தேர்தலுக்கு முன்பே ரிலீஸ் செய்திருக்க வேண்டிய படம். ஆனால் இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் தேர்தலுக்கு முன்னால் வந்தாலும் இந்த படம் ஓடும். தேர்தலுக்குப் பின்னால் வந்தாலும் இந்த படம் ஓடும்.
ஏனென்றால் இந்த படத்தில் சில சிக்கலான விஷயங்களை டைரக்டர் வைத்திருக்கிறார். அதை யாராலும் தீர்த்து வைக்க முடியாது. இந்த படத்தின் இயக்குனர் பார்க்கத்தான் நல்லவன் போல இருப்பார். ஆனால் நல்லவனே கிடையாது. படத்தில் நடிக்கவே எங்களை ஏமாற்றி அழைத்துச் சென்றார். முதலில் ஒரு சம்பளம் சொன்னார்.
பின்னர் அதிலிருந்து கொஞ்சம் குறைத்தார். நடித்துக் கொண்டிருக்கும் போதே இன்னும் குறைத்து விட்டார். இதன்பிறகு விட்டுட்டு போக மாட்டோம் என்று அவருக்குத் தெரியும். ரொம்பவும் புத்திசாலி அவர். இந்த படமும் சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் தியேட்டரில் வந்து பாருங்கள் என்று நடிகர் ராதாரவி அந்த விழாவில் பேசியிருக்கிறார்.
கவிதாலயா சரவணன் கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் ராம்தேவ் இயக்கத்தில் உருவான மக்கள் தலைவா படம் வருகிற 19ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் ரவி மரியா கதாநாயகனாக நடித்துள்ளார். அக்சரா விஜய் ராதாரவி பழ கருப்பையா நாஞ்சில் சம்பத் இயக்குனர் பேரரசு கஞ்சா கருப்பு கவிதாலயா சரவணன் வருண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மற்றும் அரசியல் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
ஒன்றுமே தெரியாதவன் முதலமைச்சர் ஆகிறான் என்பதுதான் படத்தின் கதை. இது தேர்தலுக்கு முன்பே ரிலீஸ் செய்திருக்க வேண்டிய படம். ஆனால் தேர்தலுக்கு பிறகு இப்போதும் இந்த படம் ஓடும் என்று நடிகர் ராதாரவி பேசியிருப்பது, இன்றைய தமிழக முதல்வர் விஜயை மறைமுகமாக தாக்கி பேசி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை விஜய்க்கு ஆதரவாக தான் ராதாரவி பேசி வந்தார் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.





