சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாகி விட்டாலே நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் என பலரது கவனமும் அரசியல் பக்கம் திரும்பி விடுகிறது. அதில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் கமல் விஜயகாந்த் சரத்குமார் கார்த்திக் டி ராஜேந்தர் கே பாக்யராஜ் விஜய் மன்சூர் அலிகான் கர்ணாஸ் போன்றவர்கள் சொந்த கட்சி ஆரம்பித்து களத்தில் குதித்தனர்.
இதில் எம்ஜிஆர் விஜயகாந்த் மற்றும் விஜய் போன்ற சிலருக்கு மட்டுமே மக்களின் பேராதரவும் வரவேற்பும் கிடைத்தது. மற்ற நடிகர்கள் எல்லாம் சினிமாவில் பிரகாசித்தது போல அரசியலில் ஜொலிக்க முடியாமல் ஏமாந்து போயினர். இன்னும் 2ம் நிலை 3ம் நிலை வரிசை நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் அதிமுக திமுக பாஜக காங்கிரஸ் கட்சிகளில் இணைந்தனர்.
அந்த வகையில் பாஜகவில் இருந்து வந்த நடிகை கௌதமி, பிறகு அதிமுகவுக்கு வந்தார். அங்கு கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த அவர் சில தினங்களுக்க முன்பு அதிமுக கட்சியில் இருந்து விலகினார். சமூக சேவை செய்ய விரும்புவதாக கூறி கட்சியில் இருந்து விடுவித்துக் கொள்வதாகவும் அவர் கடித்தில் தெரிவித்து இருந்தார்.
இப்போது நடிகை கௌதமியை தொடர்ந்து திரைப்பட இயக்குனர் ஆர்வி உதயகுமார் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உரிமை கீதம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்வி உதயகுமார். சின்னக்கவுண்டர் கிழக்கு வாசல் எஜமான் சிங்காரவேலன் பொன்னுமணி ராஜகுமாரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடித்தும் வருகிறார்.
இயக்குனர் ஆர்வி உதயகுமார் கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்து வந்த நிலையில் இப்போது அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆர்வி உதயகுமார் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 25 ஆண்டுகளாக நான் அதிமுகவில் உறுப்பினராகவும் மாநில கலைப்பிரிவு செயலாளராகவும் இருந்து வந்தேன்.
கட்சியின் தற்போதைய நிலையால் ஆழ்ந்த வேதனையும் கவலையும் அடைந்துள்ளேன். தற்போதுள்ள சூழலில் கட்சியில் நான் தொடர விரும்பவில்லை. ஆதலால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் மாநில கலைப்பிரிவு பதவியில் இருந்தும் விலகுகிறேன். இதுநாள் வரை எனது பணியில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி என அந்த கடிதத்தில் இயக்குனர் ஆர்வி உதயகுமார் தெரிவித்துள்ளார்.





