நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த 5 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி போயுள்ளது. இந்த படத்தை ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிப்பில் உள்ளது. இதற்கிடையே படத்தை வாங்கிய தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள், கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருமாறு தயாரிப்பாளருக்கு நிர்பந்தம் தருகின்றனர்.
ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்காமல் முடக்கிய போது நடிகர் விஜய் தவெக கட்சியின் தலைவராக மட்டுமே இருந்தார். ஆனால் அவர் தமிழக முதல்வராகி ஒரு மாதம் கடந்து விட்டது. அவர் நடித்த கடைசி படம் ஜனநாயகன் 5 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கியுள்ளது.
இதுகுறித்து அவர் ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கே குழப்பமாக உள்ளது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள விஜய் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்சார் போர்டு மூலம் தனது படத்துக்கு சென்சார் சான்று கிடைக்கவும் படத்தை ரிலீஸ் செய்யவும் ஏன் முயற்சிக்கவில்லை என்று சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே வருகிற 19ம் தேதி அதாவது நாளை மறுதினம் வியாழன் அன்று ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்று கிடைத்து விடும். வருகிற ஜூன் 26ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்பட்டு விடும் என்று ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது உறுதியாக நடக்குமா என்று சொல்ல முடியாது. இப்படி பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்து ஏமாற்றமாகி உள்ளது.
ஆனால் வருகிற 26ம் தேதி 4 படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருக்கின்றன. இதில் அர்ஜூன் தாஸ் அன்னாபென் நடித்த கான்சிட்டி தயாரிப்பாளர் கேஜே ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் அகங்காரம் என்ற படம் அதே போல் ஆட்டி மற்றும் அதர்வா நடித்த ஒரு புதிய படம் என 4 படங்கள் ரிலீஸ் செய்வதாக திட்டமிடப்பட்டு அதற்கான பிரமோசன் பணிகளும் நடந்து வருகின்றன.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஜனநாயகன் படம் வெளியானால் தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீத தியேட்டர்கள் ஜனநாயகன் படத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். அதனால் இந்த படங்களுக்கு போதிய தியேட்டர்களும் கிடைக்காது. அத்துடன் விஜய் படத்துடன் வந்தால் இந்த 4 படங்களில் ஒரு படம் கூட மக்களின் கவனத்தில் நிற்காது போய்விடும் என்பதால் இந்த 4 படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் படக்குழுவினரும் பலத்த குழப்பத்தில் உள்ளனர்.





