தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தனக்கென ஒரு பாணியில் தனி முத்திரை பதித்தவர் விசு. இவரது படங்கள் எல்லோருமே குடும்ப கதைகளை பின்புலமாக கொண்டிருக்கும். குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம் வேடிக்கை என் வாடிக்கை மணல் கயிறு குடும்பம் ஒரு கதம்பம் சகலகலா சம்பந்தி வரவு நல்ல உறவு பெண்மணி அவர் கண்மணி என விசு இயக்கி நடித்த பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.
இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணி செய்தவர் டிபி கஜேந்திரன். அவர் இயக்குனராக அறிமுகமான முதல் படம் வீடு மனைவி மக்கள் படத்தில் விசு கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் விசுவுடன் கே ஆர் விஜயா மனைவியாக நடித்திருந்தார். எஸ்வி சேகர் பாண்டியன் சீதா ஆனந்த் பாபு கோகிலா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு பிறகு சில படங்களை இயக்கிய நிலையில் டிபி கஜேந்திரன் அடுத்து இயக்கிய படம் பெண்கள் வீட்டின் கண்கள். இந்த படத்தை கேஆர்ஜி மூவிஸ் சார்பில் கே ஆர் கங்காதரன் தயாரித்தார். பெண்கள் வீட்டின் கண்கள் படத்தில் கேஆர் விஜயா எஸ் எஸ் சந்திரன் ஊர்வசி பல்லவி வைஷ்ணவி சீதா சவீதா சந்திரசேகர் ஆனந்தபாபு கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் படத்துக்கு இசையமைத்தார். படத்தின் வசனத்தை கவிஞர் வாலி எழுதினார். இந்த படத்தின் நாயகன் எஸ் எஸ் சந்திரன் தனது பாணியில் பல தில்லுமுல்லுகளை செய்து தனது 5 பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதுதான் படத்தின் கதை. ஒரு கட்டத்தில் குடும்பத்தில் சண்டை, பல பிரச்சனைகள் ஏற்பட மகள்கள் வாழாவெட்டியாக மாறுகிறார்கள். அதன் பிறகு அவர்களே தங்களது வாழ்க்கையை தீர்மானிக்க முடிவு செய்கிறார்கள்.
பெண்கள் வேலைக்கு போகலாமா கூடாதா என்ற விவாதம் இருந்த 90களின் துவக்கத்தில் 5 பெண்களையும் வேலைக்கு அனுப்பி அதன் மூலம் அவர்களை சாதிக்க வைத்து பெண்கள் கண்டிப்பாக வேலை செல்ல வேண்டும். அவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொன்ன படம் தான் பெண்கள் வீட்டின் கண்கள். இந்த படத்தில் பல நடிகர்கள் இருந்தாலும் படத்தின் ஹீரோ எஸ்எஸ் சந்திரன் தான். இந்த கேரக்டரில் தனது குரு விசுவை மனதில் வைத்துதான் டிபி கஜேந்திரன் கதையை எழுதியிருந்தார்.
ஆனால் இந்த படத்தில் நடிக்க விசு மறுத்துவிட்டார். நான் உனக்கு சினிமா கற்றுக் கொடுத்துவிட்டேன். இனி நீதான் தனியாக நின்று ஜெயிக்க வேண்டும். என் நிழலில் நீ ஒதுங்கினால் உன்னால் தனித்து வளர முடியாது. அதனால் காமெடி வில்லனாக நடித்து வரும் எஸ்எஸ் சந்திரனை இந்த கேரக்டரில் நடிக்க வைத்து உன் திறமையை காட்டு என்று கூறிவிட்டார். அதன்பிறகு எஸ்.எஸ். சந்திரன் நடித்த இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.





