நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே தனது அடுத்த படத்தை இயக்கவும் அவர் வாய்ப்பளித்தார். ஏகே 64 படத்துக்கு அனிருத் இசையமைக்கவும் நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தி கமிட் செய்யப்பட்டனர்.
ஆனால் இந்த படத்தில் நடிக்க சம்பளம் ரூ. 185 கோடி என நடிகர் அஜீத்குமார் கேட்ட நிலையில் தயாரிப்பாளர்கள் பலரும் பின்வாங்கினர். ஏனெனில் கடைசியாக ரூ. 160 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் 25 கோடி ரூபாய் சம்பளத்தை அதிகரித்து விட்டார். அஜீத்குமார் படத்தின் வியாபாரமே ரூ. 225 கோடி என்றுதான் சொல்லப்படுகிறது.
ஏனெனில் அஜீத்குமாருக்கு போட்டியாளராக கருதப்பட்ட விஜயும் அரசியலுக்கு சென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டார். மேலும் அஜீத்குமார் படங்களுக்கு தியேட்டர்களில் பெரிய வசூல் இல்லை. ஓடிடி சாட்டிலைட் வியாபாரமும் பெரிய அளவில் இல்லை. அதனால் 300 கோடி ரூபாய் பட்ஜெட் வரை படம் தயாரித்தால் பலத்த நஷ்டம்தான் ஏற்படும்.
அதுமட்டுமின்றி அஜீத்குமார் நடிப்பதில் அதிக ஆர்வமின்றி எப்போதும் கார் ரேஸில்தான் அதிக ஈடுபாடு காட்டுகிறார். மாதக்கணக்கில் வெளிநாடுகளுக்கு சென்று கார் ரேஸில் கலந்துக்கொள்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அஜீத்குமார் பல கார் ரேஸ்களில் கலந்துக்கொண்ட நிலையில் சென்னையில் அவர் இருந்தது கொஞ்ச நாட்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தனது சம்பளத்தை ரூ. 185 கோடியில் இருந்து ரூ. 150 கோடியாகவும் குறைப்பதாக அறிவித்தார். ஆனால் அதிகபட்சமாக ரூ. 110 கோடி வரை சம்பளம் தரலாம். அதற்கு மேல் முடியாது என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறிவிட்டனர். இதனால் அஜீத்குமாரின் 64வது படம் உருவாவதில் பலத்த சிக்கல் நீடித்து வருகிறது. அவரது ரசிகர்களும் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் ஏகே 64 படத்தை அஜீத்குமாரே சொந்தமாக தயாரிக்க உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன்தான் அந்த படத்தை இயக்குகிறார் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. மிக விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இது சாத்தியம்தானா? அஜீத்குமார் தனது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளராக களத்தில் இறங்க, அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஏகே ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.





