நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். துவக்கத்தில் விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வகையில், அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.
பிக்பாஸ் வீட்டுக்குள், இலங்கையை சேர்ந்த பெண் போட்டியாளர் லாஸ்லியா மீது காதல் வயப்பட்ட கவின், அந்த சீசனை சற்று விறுவிறுப்பாக்கினார். எனினும் இறுதி வரை செல்ல முடியாமல், பாதியிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறினார், எனினும் அவரது காதல் ஏக்க செயல்பாடுகள், மக்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது.
அதன்பிறகு டாடா மற்றும் லிப்ட் ஆகிய படங்களில் நடித்த கவினுக்கு 2 படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்தது. அதிலும் ஒரு இளம் தந்தையாக கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கவினின் தவிப்பான நடிப்பு, டாடா படத்தில் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.
அதன்பிறகு இப்போது ஸ்டார் என்ற படத்தில் கவின் நடித்திருந்தார். இந்த படத்தின் ட்ரெயிலர் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் சுவாரசியமே இல்லாமல் போனது. அதனால் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் கவினுக்கு பெரிய அளவில் மார்க்கெட் இருப்பதாகவே, கோலிவுட் வட்டாரத்தில் ஒரு சீன் இருந்து வருகிறது.
இதற்கிடையே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ம் பாகத்திலும், சூர்யா நடித்த சில்லுன்னு ஒரு காதல் படத்தின் 2ம் பாகத்திலும் கவின் நடிப்பதாக ஒரு தகவல் பரவியது. சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோருக்கு பெரிய வெற்றியை தந்த அந்த படங்களில் அவர்கள் நடிக்காமல், அதில் கவின் நடிப்பது ஏன் என்றும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போதே நடிகர் கவின், தனது இணைய கூலிப்படை மூலம் தனக்கு செல்வாக்கு உள்ளதை போல, சமூக வலைதளங்களில் பில்டப் செய்தார். அதே போல் ஸ்டார் படம் பெரிய வெற்றியை போல, தனது இணைய கூலிப்படை மூலம் வதந்தியை பரப்பி விட்டார். இப்போது முக்கிய ஹிட் படங்களில் 2ம் பாகத்தில் நடிப்பதாகவும் புரளியை கிளப்பி விட்டுள்ளார் என்றும் தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறுகையில், அந்த படங்களில் கவின் நடிக்க பேச்சு வார்த்தை மட்டுமே நடந்துள்ளது. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதனால் அந்த படங்களில் கவின் நடிக்கலாம், நடிக்காமலும் போகலாம் என்றும் கூறியுள்ளார்.





