மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரஜினி கமல் விஜய் என முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்த நடிகர்களிடம் இருந்த மிகப்பெரிய ஒரு நல்ல பழக்கம் காலம் தவறாமை தான். அதாவது குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவதுதான். இதில் எந்த காம்ப்ரமைஸ்சும் அவர்கள் செய்து கொள்ளவே மாட்டார்கள்.
அதிலும் குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலை 5 மணிக்கு ஷூட்டிங் என்றால் காலை 4:30 மணிக்கே மேக்கப்புடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுவார் என்று சொல்வதுண்டு. கடந்த 1966ம் ஆண்டு வெளிவந்த படம் மீண்ட சொர்க்கம். இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஜெமினி கணேசன் டி ஆர் ராமச்சந்திரன் பத்மினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மதுரம் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்தது.
இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பத்மினி. கதாநாயகியை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் மீண்ட சொர்க்கம் படம் இருந்தது. அப்போது பத்மினி பிஸியான நடிகையாக இருந்தார். படப்பிடிப்புகளுக்கு மிகவும் தாமதமாக வருவது அவரது வழக்கமாக இருந்தது. ஆனால் இயக்குனர் ஸ்ரீதர் எல்லா விஷயங்களிலும் மிக சரியாக இருப்பவர். அதிலும் எந்த காரணம் கொண்டும் படப்பிடிப்பு தாமதமாக நடத்தகூடாது என்பதில் அதிக கவனம் கொண்டவர்.
அதனால் அவருடைய ஒட்டுமொத்த படக்குழுவுமே அப்படி ஒரு கட்டுப்பாட்டுடன் இருக்கும். எந்த நடிகர் நடிகையுடன் ஒப்பந்தம் செய்தாலும் படப்பிடிப்புகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வர வேண்டும் என்பது அங்கு ஒரு எழுதப்படாத விதியாக இருக்கும். ஆனால் நடிகை பத்மினி இந்த படப்பிடிப்புக்கு தொடர்ந்து தினமும் தாமதமாக வந்தார். அவருக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை பல நாட்கள் ஏற்பட்டது.
யாரையும் திட்டுவதோ கோபப்பட்டு பேசியோ பழக்கம் இல்லாதவர் ஸ்ரீதர். அதனால் பத்மினிக்கு அவர் தவறை உணர்த்த வேண்டும் என்று ஸ்ரீதர் கருதினார். அன்று காலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பு நிர்வாகியிடம் குழந்தைகள் விளையாடும் கோலி குண்டுகளை வாங்கி வரச் சொன்னார். படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் அதைக் கொடுத்து அந்த தளத்திலேயே விளையாடவும் சொன்னார். அப்போது அங்கே இருந்த சிலருடன் அவரும் சேர்ந்து கோலி விளையாடினார். நடிகை பத்மினி அன்றும் வழக்கம்போல தாமதமாக வந்து மேக்கப் போட்டுக் கொண்டு அரங்குக்குள் வந்தார்.
அப்போது அங்கிருந்த ஸ்ரீதரை பார்த்து, சார் நான் ரெடி என்க, இரும்மா விளையாடிட்டு வர்றோம் என்று அவர் கூற, ஷூட்டிங் நேரத்துல இப்படி கோலி விளையாடினா எப்படி? என்று பத்மினி படபடப்பாக கேட்டிருக்கிறார். வேற என்ன செய்றது? காலையிலிருந்து எல்லாரும் சும்மாதான் உட்கார்ந்து இருக்கோம். விளையாடி முடிச்சுட்டு வர்றோம். வெயிட் பண்ணு என்று ஸ்ரீதர் கூறிவிட்டார். அப்போது தன்னுடைய தவறை புரிந்துகொண்டு ஸ்ரீதரிடம் மன்னிப்பு கேட்ட பத்மினி மறுநாள் முதல் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வரத் தொடங்கி இருக்கிறார்.





