தமிழ் சினிமாவில் இயக்குனராக ஹீரோவாக யூத் படம் மூலம் களத்தில் குதித்து இருக்கிறார் கென் கருணாஸ். இன்று தியேட்டர்களில் வெளியான யூத் திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கென் கருணாஸ் உடன் சுராஜ் வெஞ்சரமூடு தேவதர்ஷினி அனீஸ்மா அனில் குமார் மீனாட்சி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
யூத் படத்தின் கதை என்னவென்று இப்போது பார்க்கலாம். 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பிளஸ் 1 வகுப்புக்கு செல்லும் கென் கருணாஸ் எப்படியாவது ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்ற முடிவில் பள்ளிக்குச் செல்கிறார். பள்ளியில் காதலித்து கல்லூரியில் காதலை தொடர்ந்து அதே பெண்ணை இறுதியில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே அவரது லட்சியம்.
ஆனால் ஒரு பெண் கூட இவரது காதலை ஏற்பதில்லை. அந்த சமயத்தில் மீனாட்சி அங்கு வருகிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. இந்த காதலை பிரிக்கவும் சதி நடக்கிறது. மீனாட்சி தனது பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று ஊருக்கு செல்கிறார். அந்த நேரத்தில் சோனல் என்ற பெண் கென்னிடம் தனது காதலை கூறுகிறார். அவருக்கு நோ சொல்ல கென் மறுக்கிறார்.
இந்நிலையில் கென் – சோனல் நெருக்கமாக இருப்பதை பார்த்த மீனாட்சி கென்னுடன் பிரேக்கப் செய்கிறார். காதல் தோல்வியில் இருக்கும் கென்னுக்கு அனிஷ்மாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. இதுவரை நான் செய்தது காதல் இல்லை. இதுதான் உண்மையான காதல் என்று அனிஷ்மாவுடன் பழகி வரும் கென் தனது காதலை பள்ளி இறுதி நாளில் அவரிடம் சொல்கிறார்.
ஆனால் நான் உன்னை நல்ல நண்பனாக தான் நினைத்தேன் என்று அவர் கூற கென் ஏமாந்து போகிறார். தொடர்ந்து கென்னின் காதல் என்னவானது, அவரது பள்ளி வாழ்க்கை என்னவானது, அவர் என்னென்ன பிரச்னைகளை சந்தித்தார் என்பதுதான் இந்த யூத் படத்தின் கதை. நடிப்பில் பக்காவான கமர்சியல் ஹீரோவாக கென் திரையில் தெரிகிறார். டான்ஸ் காமெடி எமோஷனல் ஆக்சன் என அனைத்திலும் தன் முத்திரையை பதிக்கிறார்.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை காமெடிக்கு பஞ்சமே இல்லை. படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவு எடிட்டிங் இசை என படத்துக்கு பிளஸ் பாயிண்ட்களாக உள்ளன. ஆனால் ஏற்கனவே பலமுறை பார்த்து பழகிப்போன திரைக்கதை என்பதுதான் மைனஸ் பாயிண்டாக உள்ளது. எனினும் யூத் படம் நிச்சயம் ஜென்ஸி ரசிகர்களின் வரவேற்பை பெறும் ஒரு யூத் மயமாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.





