நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கி இருக்கிறார். இம்மாதம் 2ம் தேதி அறிக்கை ஒன்றை வௌியிட்ட விஜய், தொடர்ந்து மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து அவ்வப்போது ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். காணொலி வாயிலாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகளை தருகிறார்.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை, பட்டி தொட்டி எங்கும் சென்று சேர்க்க வேண்டும். 8 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை தமிழக வெற்றிக்கழகம் கட்சியை விஜய் ஆரம்பித்திருக்கிறார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். மக்களின் பிரச்னைகளை, குறைகளை நேரடியாக சென்று கேட்க வேண்டும்.
எந்த இடத்தில் பொதுமக்கள் புகார், குற்றம் சொன்னால் அதை கவனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். விமர்சனங்களுக்கு கோபம் காட்டக் கூடாது என்றும் அறிவுரை தந்திருக்கிறார். அதுபோல் மாற்று கட்சியினர் தரப்பில் விமர்சனங்கள் வந்தாலும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்துவிட வேண்டும் என்பதும் அவரது அறிவுரையாக உள்ளது.
நடிகர் விஜய் கட்சி பெயரை மட்டுமே அறிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை. யாருக்கும் ஆதரவு இல்லை. சட்டசபை தேர்தல் மட்டுமே இலக்கு. வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என்று மட்டுமே கூறியிருக்கிறார். ஊழல் இல்லாத, சாதி மத பேதம் இல்லாத வெளிப்படையான நிர்வாகமே தனது இலக்கு என்பதையும் அந்த முதல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து, பொதுவாக எதிர் விமர்சனங்கள் இல்லை என்றாலும் பொதுமக்கள் தரப்பில் அப்படி ஒன்றும் பரபரப்பான விஷயமாக அது பேசப்படவில்லை. அதே போல் அதிமுக, திமுக தரப்பிலும் விஜய் வருகை குறித்த பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதுதான் ஜனநாயகம் என்ற பொதுவான கருத்தையே அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சமீபத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், தமிழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை நாம் உடனடியாக சேர்த்தாக வேண்டும் என்று காமெடி செய்திருக்கிறார். அதிமுக, திமுக கட்சிகளே ஒரு கோடி உறுப்பினர்களை கடக்க முடியாத நிலையில், கட்சி பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி இது சாத்தியம் என, மாநில மாவட்ட நிர்வாகிகள் தலை கிறுகிறுத்து போய் கிடக்கின்றனர்.





