திரைப்பட பின்னணி பாடகி எஸ் ஜானகி வயது முப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மைசூரில் நேற்று காலமானார். மொத்தம் 17 மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியிருக்கிறார். குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகைக்குப் பிறகு அவரது படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.
குறிப்பாக இளையராஜா இசையில் 1976ம் ஆண்டில் வெளிவந்த அன்னக்கிளி படத்தில் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற இளையராஜாவின் இசையில் உருவான முதல் பாடலை பாடியது எஸ் ஜானகி தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி எஸ் ஜானகியின் மறைவு இசைஞானி இளையராஜாவை சோகத்தில் ஆக்கி உள்ளது. ஐரோப்பா நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் இளையராஜா இப்போது பங்கேற்று வருகிறார்.
லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் மறைந்த பாடகி எஸ் ஜானகிக்கு இளையராஜா மௌன அஞ்சலி செலுத்தினார். அந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், பாடகி எஸ் ஜானகி இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் உழைப்பு மிக அதிகம். என்னுடைய 50 ஆண்டுகால இசை பயணத்தில் அவரோடு நிறைய பாடல்களில் பணியாற்றி இருக்கிறேன். அவரது இறப்பு ஈடு செய்ய முடியாதது. அவருக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதேபோல் மூத்த பின்னணி பாடகி பி சுசீலாவும் பாடகி எஸ் ஜானகி மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரபல மூத்த பாடகியான பி சுசீலா தனது இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது, என் வாழ்க்கையில் இது ஒரு மிக ஆழமான துயரமான நாள்.
இசைத்துறையில் ஒரு புகழ்பெற்ற சக கலைஞர் என்பதை தாண்டி என்னுடைய உண்மையான தோழியையும் சகோதரியுமான எஸ் ஜானகியை இழந்து விட்டேன். இசைத்துறையில் கிட்டத்தட்ட 5 தசாப்தங்களை அதாவது 50 ஆண்டுகள் ஒன்றாக கழித்த நாங்கள் பல மொழிகளில் எண்ணற்ற மெல்லிசை பாடல்களையும் அழகான வாழ்நாள் முழுவதுமான ஒரு பந்தத்தையும் பகிர்ந்து கொண்டோம்.
அவருடைய பிரிவு இசை உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. என் அன்பிற்குரிய ஜானகி நீ இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்வாய் என்று பாடகி பி சுசீலா தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்திருக்கிறார். இதே போல் பின்னணி பாடகர் மனோவும் பாடகி எஸ் ஜானகி அம்மா மறைவுக்கு தனது ஆழந்த வருத்தங்களை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.





