நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான என் ஜோடி மஞ்சக்குருவி ஒத்த ரூவா தாரேன் இளமை இதோ இதோ போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இந்த பாடல்களுக்கு தியேட்டரில் பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.
தனது இசையில் உருவான பாடல்களை அனுமதியின்றி குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இப்போது குட் பேட் அக்லி படத்தில் இருந்த அந்த 3 பாடல்களும் கோர்ட் உத்தரவுபடி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அந்த பாடல் காட்சிகளில் பிஜிஎம் இசை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அது அந்த காட்சிகளுக்கு பொருத்தமாக இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இதற்கிடையே கோடிக்கணக்கில் இசையமைப்பாளர்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் சம்பளம் வாங்கிக்கொண்டு இப்படி பழைய பாடல்களை படங்களில் பயன்படுத்துகின்றனர். அதுவும் 10 விநாடிகள் 20 விநாடிகள் என்று இல்லாமல் ஒரு முழு பாடலையும் அவர்கள் இப்படி பயன்படுத்தும் போது எதற்காக அவர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பளம் தர வேண்டும் என்றும் பலர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இதுகுறித்து கூறியதாவது, என்னைக் கேட்டால் நான் பழைய பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். புது பாடல்களை உருவாக்கத்தான் ஆசைப்படுவேன். ஆனால் அதெல்லாம் இயக்குனர்களின் விருப்பம். அவர்கள் இசையமைப்பாளரிடம் பழைய பாடல்களை படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன் என சொல்ல மாட்டார்கள்.
ரீ ரிக்கார்டில் செய்யும் போதுதான் அவர்கள் பழைய பாடலை பயன்படுத்தி உள்ளார்கள் என்பதே தெரிய வரும். முழுக்க முழுக்க பழைய பாடல்களை பயன்படுத்துவது அந்த படத்தின் இயக்குனரின் விருப்பம்தான். தனிப்பட்ட முறையில் நான் அதற்கு அனுமதிக்க மாட்டேன். ஒரு படம் பீரியட் ஜானரில் இருந்தாலோ இல்லை கதைக்கு தேவைப்பட்டால் பரவாயில்லை.
ஆனால் இதெல்லாம் முழுக்க முழுக்க இயக்குனரின் முடிவு தானே தவிர ஒரு இசையமைப்பாளர் எடுக்கும் முடிவு இல்லை. என்னைப் பொருத்தவரை எனக்கு புது பாடல்களை உருவாக்க தான் பிடிக்கும் என்று வெளிப்படையாக ஜீவி பிரகாஷ் கூறியிருக்கிறார். இதன் மூலம் குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்கள் அந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்த முடிவுதானே தவிர இசையமைப்பாளரான எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஜீவி பிரகாஷ்குமார் தெளிவுபடுத்தி விட்டார்.





