முன்னாள் நடிகர் இன்றைய முதல்வர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் சில நெருக்கமான நண்பர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் ஸ்ரீநாத். வேட்டைக்காரன் படத்தில் நடிகர் விஜயுடன் காமெடி ரோலில் இணைந்து நடித்திருந்தார். அவர் இப்போது தவெக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
அதே போல் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ், நடிகர் விஜய்க்கு மிகவும் நெருக்கமான நண்பர். அவர் பத்ரி உள்ளிட்ட சில படங்களில் விஜயுடன் இணைந்து நடித்திருக்கிறார். விஜய் சஞ்சீவ் இருவரும் வாடா போடா என பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சஞ்சீவ், நாங்கள் காலேஜில் படித்தபோது ஒரு முறை வட இந்தியாவுக்கு டூர் சென்றோம். ரயிலில் நாங்கள் பயணித்த போது 60 70 பேர் கையில் உருட்டுக்கட்டையுடன் வந்தார்கள். எங்களுடன் படிக்கும் பெண்களும் அங்கு இருந்தார்கள். அவர்கள் வந்து எல்லோரையும் அடிக்க தொடங்கி விட்டார்கள்.
விஜய் அப்போது அப்பர் பெர்த்தில் படுத்திருந்தார். அதைப் பார்த்த விஜய் இரண்டு பெர்த்துக்களிலும் கைகளை வைத்துக்கொண்டு ஒரு உதை உதைத்தார். உதை வாங்கியவன் அங்கே போய் விழுந்தான். அந்த கேப்பில் நாங்கள் எல்லாம் ஓடிவிட்டோம். அடுத்த ஸ்டேஷனில் போலீஸ் வந்துவிட்டது என்று சஞ்சீவ் கூறியிருந்தார்.
ஆனால் இதே சம்பவம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் நடிகர் விஜயும் கூறி இருக்கிறார். ஆனால் அவர் கூறும் போது, கல்லூரியில் படிக்கும் போது டூர் சென்றிருந்தோம். டிரெயினில் 2 பேர் தேவையில்லாமல் எங்கள் வகுப்பு பெண்களை கிண்டல் செய்தார்கள். நாங்கள் 10 பேர் இருந்தோம் அவர்களை அடித்து துரத்தி விட்டோம். ஆனால் அடுத்த ஸ்டேஷனில் அவர்கள் 40 பேர் வந்து விட்டார்கள். அங்கு பெரிய தகராறு நடந்தது. அதனால் நிறைய நண்பர்கள் கட்டுப் போட்டுக் கொண்டுதான் சென்னைக்கு வந்து இறங்கினார்கள் என்று விஜய் கூறியிருக்கிறார்.
இப்போது இந்த 2 வீடியோக்களையும் கம்பேர் செய்து நடிகர் சஞ்சீவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதாவது விஜயே முதலில் 2 பேர் வந்தார்கள். பிறகு 40 பேர் வந்து எங்களை தாக்கிவிட்டார்கள் என்று நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆனால் சஞ்சீவ் அதை மிகைப்படுத்தி 60 70 பேரை ஒற்றை ஆளாக விஜய் எதிர்கொண்டு சண்டையிட்டார் என்ற தொனியில் ஏக்கர் கணக்கில் பொய் சொல்கிறார் என்று கலாய்த்துள்ளனர்.





