நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் கொடி கட்டிப் பறக்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். கோட் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ. 200 கோடி என்ற நிலையில், தனது அடுத்த படத்துக்கு அதாவது விஜய் 69 படத்துக்கு ரூ. 250 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். அந்த சம்பளம் தரும் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பார், அல்லது அந்த படத்தை தனது பினாமி மூலமாக அவரே தயாரிப்பார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.
ஆனால் விஜய் 1990களில் நடிக்க வந்த புதிதில் அவருக்கு முழு ஆதரவாளராக இருந்து அவரை கை தூக்கி விட்டவர் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர்தான். முதலில் விஜய் நடிக்கும் படத்தின் கதைகளை தேர்வு செய்வது, படத்தின் இயக்குனர், கதாநாயகி, இசையமைப்பளார் உள்ளிட்ட விஷயங்களை தீர்மானிப்பது எஸ்ஏசி முடிவில்தான் இருந்தது.
தன் மகன் விஜய்க்கு சினிமாவில் ஒரு நல்ல அடையாளமும், அங்கீகாரமும், வரவேற்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனது நிறைய படங்களில் நடித்த கேப்டன் விஜயகாந்திடம் பேசி, செந்தூரப்பாண்டி படத்தில் அவரை விஜய்க்கு அண்ணனாக நடிக்க வைத்ததும் எஸ்ஏ சந்திரசேகர்தான். அவர் முயற்சி எடுக்காவிட்டால், செந்தூரப்பாண்டி படத்தில் கேப்டன் நடித்திருக்க மாட்டார்.
ஆனால் விஜய் ஒரு கட்டத்தில் பெரிய நடிகராக வளர்ந்த பிறகு, அவர் தனது சினிமா நடிப்பு குறித்து அவரே முடிவு செய்ய ஆரம்பித்தார். எஸ்ஏசி கதை கேட்காமல், விஜயே நேரடியாக கேட்டு படங்களை தேர்வு செய்தார். கால்ஷீட் விவரங்களை பார்த்துக்கொள்ள தனியாக ஆட்களை நியமித்தார். தந்தையுடன் பேசுவதை ஆண்டுக்கணக்கில் தவிர்த்தார். எஸ்ஏசி தனது தனிப்பட்ட விஷயங்களில், அதிகளவில் மூக்கை நுழைப்பது பிடிக்கவில்லை என திருமணத்துக்கு பிறகு தந்தையை விட்டு விலகி, நீலாங்கரை பங்களாவுக்கு குடும்பத்துடன் வந்துவிட்டார்.
இப்போது விஜயை போலவே, தந்தையை ஒதுக்கிய மகனாக ஜேசன் சஞ்சய் மாறிவிட்டார். விஜய் சினிமாவில் வளர்ந்த பிறகுதான் தனது தந்தை எஸ்ஏசியை புறக்கணித்தார். ஆனால் ஜேசன் சஞ்சய், சினிமாவில் நுழையும் முன்பே தந்தையை அலட்சியப்படுத்த துவங்கி விட்டார். தனது மகனை விஜய், நடிகராக்க ஆசைப்பட்ட நிலையில், அவர் இயக்குனராக வேண்டும் என்று முனைப்பாக இருந்து வருகிறார்.
பிரேமம் படத்தின் இயக்குனரிடம், ஜேசன் சஞ்சய் நடிப்பதற்கான ஒரு கதையை விஜய் கேட்டு வைத்திருந்த நிலையில், லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்தில் படம் தயாரிக்க, ஒப்பந்தம் செய்திருக்கிறார் அவரது மகன் ஜேசன் சஞ்சய். விஜய் அரசியலுக்கு செல்வதால், தனது மகனை கலை வாரிசாக்க விஜய் நினைத்தார். ஆனால், அப்பா ஆசையை நிறைவேற்றாமல் இயக்குனராக தமிழ் சினிமா களத்தில் குதித்திருக்கிறார் அவரது மகன் ஜேசன் சஞ்சய் என்பது குறிப்பிடத்தக்கது.





