தமிழ் சினிமாவில் இருந்து ஏகப்பட்ட பேர் அரசியலுக்கு வந்து விட்டனர். ஆனால் இதுவரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா கேப்டன் விஜயகாந்த் தளபதி விஜய் என குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அரசியலில் சாதனைகளை செய்திருக்கின்றனர். மற்றபடி பல நடிகர்கள் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை. குறிப்பாக உலக நாயகன் என புகழ்பெற்ற நடிகர் கமல்ஹாசன் கூட அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக பெரிதாக சாதிக்க முடியவில்லை.
நடிகர்கள் சிவாஜி கணேசன் கே பாக்யராஜ் டி ராஜேந்தர் நவரச நாயகன் கார்த்திக் கருணாஸ் மன்சூர் அலிகான் சரத்குமார் என பலரும் அரசியலுக்கு வந்து தாக்குப் பிடிக்க முடியாமல் போனதுதான் சரித்திர உண்மை. இந்த சூழலில் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கி இரண்டே ஆண்டுகளில் சட்டசபை தேர்தலை தனித்து சந்தித்து 108 இடங்களில் வெற்றி பெற்று இப்போது தமிழக முதல்வராக விஜய் இருந்து வருகிறார்.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையைப் போல விஜய் முதல்வரான பிறகு தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்களுக்கு அடுத்த முதல்வர் நான்தான் என்ற கனவு வந்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக பலரும் அரசியலில் குதிப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவதாக கூறினார். அதே நேரத்தில் பொதுமக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு பேசி பலத்த சர்ச்சையில் சிக்கினார்.
அதன்பிறகு சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அரசியல்வாதி போல பேசி பெரிய அளவில் பில்டப் செய்திருக்கிறார். அதுவும் இப்போது சர்ச்சையாகி விட்டது. இந்த சூழ்நிலையில் நடிகர் விஷாலும் தான் அரசியலுக்கு வரப்போவதை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். ஏற்கனவே இவர் அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் பேசியதாவது, நான் இந்த சினிமாத் துறையில் நடிகனாக இருந்ததற்காக உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக குற்ற உணர்ச்சின்னு நான் சொல்லலே. ஒரு நல்ல உணர்ச்சியோடு வந்து சொல்றேன்.
இனிமேல் நாம போற பாதை வந்து சாதாரண பாதை கிடையாது. நேர்பாதை தான். குறுக்குபாதை கிடையாது. குறுக்குப் பாதையே கிடையாது. நம்மோட நேர்பாதையில் நாம் போகும்போது நாம நேர்மையாக செயல்படும் போது நான் உங்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசியிருக்கிறார்.





