நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இந்த படம் சென்சார் பிரச்சனை காரணமாக ஆறு மாதங்களாக திரைக்கு வரவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தன். அதன் பிறகு ஒரு வழியாக கடந்த வாரம் ஜூலை 23ம் தேதி ஜனநாயகன் படம் வெளியானது.
இயக்குனர் எச் வினோத் இயக்கிய இந்த படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பாபி தியோல் பிரகாஷ்ராஜ் பிரியாமணி நரேன் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.
நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் பெரிய அளவில் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. படத்துக்கு ஏ சான்றிதழ் 6 மாதங்கள் தாமதமான வெளியீடு இணையத்தில் படம் லீக் ஆனது உள்ளிட்ட காரணங்களால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.
அது மட்டும் இன்றி ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழந்தைகளுடன் வரும் ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டமும் வெகுவாக குறைந்து போனது. அதனால் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்கவில்லை. தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் ரூ. 27 கோடியாகவும் 2வது நாள் வசூல் ரூ. 13 கோடியாகவும் 3வது நாள் வசூல் ரூ. 22 கோடியாகவும் 4வது நாள் வசூல் ரூ. 23 கோடியாகவும் மட்டுமே இருந்தது. தொடர்ந்து பல தியேட்டர்களில் போதிய கூட்டம் இன்றி காற்று வாங்குகிறது.
இந்த சூழ்நிலையில் ஜனநாயகன் படத்துக்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் ஜனநாயகன் படத்தில் பாப்பாபட்டி கிராமம் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சேபனைக்குரிய அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜனநாயகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் சக்திவேல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தளபதி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





