நடிகை சினேகா கதாநாயகியாக நடித்த பார்த்திபன் கனவு படத்தை இயக்கியவர் கரு பழனியப்பன். சமீபத்தில் நடிகை சினேகா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் கரு பழனியப்பன் கூறியதாவது, நான் பிரிவோம் சந்திப்போம் என்று ஒரு படம் பண்ணினேன். அந்த படத்தில் முதலில் கதாநாயகி சினேகா கிடையாது. வேறு ஒரு கதாநாயகியை வைத்து விளம்பரம் எல்லாம் கொடுத்துட்டோம். அப்புறம் மாற்றம் ஏற்பட்டு கதையும் மாறிவிட்டது.
அதன்பிறகு நடிகை சினேகா வீட்டுக்கு நான் நேரில் சென்றேன். ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் அவரை நேரில் சந்திக்கிறேன். உங்க வீட்டுக்கு வர்றேன்னு போன்ல சொன்னதும் என்ன என்ன என்று கேட்கறாங்க. எப்பவும் வீட்டுக்கு வரனே்னு சொல்லாதவன் திடீர்ன்னு வர்றேன்ங்கறானே என்று அவங்க திரும்ப திரும்ப கேட்கறாங்க.
இல்லே நான் வர்றேன்னுட்டு போனேன். போன உடனே நான் ஒரு கதை சொல்றேன் கேளுங்க என்றேன். அதெல்லாம் சொல்ல வேண்டாம். எப்ப வரணும் நடிக்க அப்படீன்னு கேட்டாங்க. நான் அடுத்த வாரம் என்றேன். என்னது அடுத்த வாரமா? என்று ஆச்சரியமாக கேட்டார்.
எனக்கு நீங்க செய்ய வேண்டிய ஒரே ஒரு உதவி. அடுத்த வாரம் ஷூட்டிங் வெச்சிருக்கேன். அதை தள்ளிப் போட முடியாது. நீங்க முதல்ல ஒரு 10 நாள் வந்துடுங்க. அப்புறம் நான் சமாளிச்சிக்கறேன். அப்புறமா வாங்க என்றேன். அப்போ ஒரு தெலுங்கு படத்துல நடிக்க சினேகா டேட் கொடுத்திருந்தாங்க.
அப்புறம் அந்த தெலுங்கு பட புரடியூசர்கிட்ட போன் பண்ணி அவங்களே பேசினாங்க. ஒரு முக்கியமான படம். எனக்கு ரொம்பவும் வேண்டிய டைரக்டர். நான் அந்த படத்துக்கு போயே ஆகணும். அதனால் நீங்க 10 நாள் டேட் தரணும் என்று சினேகா கேட்டவுடன் அவர் பதறிட்டார்.
என்னம்மா இப்படி திடீர்ன்னு சொல்றீங்க என்று அவர் கேட்டார். எனக்கு திடீர்ன்னு உடம்புக்கு முடியாம போயிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? நான் 30 நாள் உங்களுக்கு டேட் கொடுத்திருக்கேன். அதுல 30 நாளும் கேட்கலே. 10 நாள்தான் கேட்கறேன் என்று என்னிடம் கதை கேட்காமல் 10 நாள் டேட் வாங்கி நடித்து தந்தார் சினேகா என்று கரு பழனியப்பன் அதில் கூறியிருக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் சேரன் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





