தமிழ் சினிமாவில் இயக்குனர் வசந்த், மிகவும் முக்கியமான இயக்குனராக திகழ்ந்து வருபவர். இவர் தொடக்கத்தில் ஒரு பத்திரிக்கையாளராக இருந்து அதன் பின் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து “கேளடி கண்மணி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பின் அஜித்தை வைத்து இவர் இயக்கிய “ஆசை” திரைப்படம் அஜித்தின் கெரியரில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. மேலும் “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “ரிதம்” போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கினார் வசந்த்.
சமீபத்தில் கூட “நவரசா” என்ற வெப் சீரீஸில் “பாயாசம்” என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வஸந்த் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது, தான் இயக்கிய திரைப்படத்தை பார்த்து மதுப்பழக்கத்திற்கு அடிமையான பலர் திருந்திவிட்டதாக கூறியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு வஸந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சத்தம் போடாதே”. இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், பத்மபிரியா, நிதின் சத்யா ஆகியோர் நடித்திருந்தனர். குடிப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து இத்திரைப்படத்தை வஸந்த் உருவாக்கியிருந்தார்.
இந்த நிலையில் அப்பேட்டியில் வஸந்த் பேசியபோது, “நான் ஒரு முறை ஒரு மறுவாழ்வு மையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அங்கே குடிப்பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக பலருக்கும் பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
அந்த மையத்தில் சிகிச்சை பெற்று மதுப்பழக்கத்தில் இருந்து வெளிவந்த நபர் ஒருவர், மேடையில் பேசும்போது, அவர் தனது மனைவியை குடித்துவிட்டு எப்படி எல்லாம் துன்படுத்தினார் என கூறி மனைவியிடம் மன்னிப்புக் கேட்டார். நான் அந்த மேடையிலேயே அழுதுவிட்டேன்.

இந்த குடிப்பழக்கத்தால் வரும் பிரச்சனையை பற்றி எப்படியாவது படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி உருவான திரைப்படம்தான் சத்தம் போடாதே. அந்த படத்தை பார்த்த பல ஆட்டோக்காரர்கள் இந்த படத்தை பார்த்த பின்புதான் குடிப்பழக்கத்தை கைவிட்டதாக என என்னிடம் கூறியிருக்கிறார்கள்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





