இயக்குனர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. கர்நாடகா மாநிலம் பெல்கம் என்ற பகுதியை சேர்ந்தவர். கற்க கசடற படத்தை தொடர்ந்து தர்மபுரி தாம் தூம் காஞ்சனா குண்டக்க மண்டக்க அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ராய் லட்சுமி நடித்திருந்தார்.
கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிண்ட்ரெல்லா என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். அப்போது முதுகுப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சினிமாவில் இருந்து அவர் விலகி இருந்தார். இரண்டு ஆண்டுகள் அவர் படங்களில் நடிக்காமல் முழுமையான ஓய்வில் இருந்தார்.
தொடர்ந்து உடல்நல பாதிப்பு குணமான நிலையில் இப்போது மீண்டும் நடிகை ராய் லட்சுமி படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதற்கான முயற்சியிலும் இறங்கி பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் நிறைய படங்களில் அவர் கவர்ச்சியாக மட்டுமே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ஆரம்ப காலத்தில் கதைகளை தேர்ந்தெடுப்பதில் நான் பெரிய அளவில் கவனம் செலுத்தியது இல்லை. எது சரியான படம் எது தவறான படம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் தோல்வி படங்களையும் பார்த்திருக்கிறேன். வெற்றிப் படங்களையும் பார்த்திருக்கிறேன். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டியுடன் நடித்திருக்கிறேன்.
அங்கு ரசிகர்கள் என்னை கேர்ள்ஸ் நெக்ஸ்ட் டோர் என பார்க்கிறார்கள். ஆனால் தமிழில் நான் சேலை அணிந்து நடித்தாலும் கிளாமராகவே பார்க்கிறார்கள். இந்த கிளாமர் பிம்பம் ஏன் படிந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. திரையுலகில் ஒரு குறிப்பிட்ட முறையில் அறிமுகமாகி அந்த அடையாளம் மக்களுக்கு பிடித்துவிட்டால் மீண்டும் மீண்டும் நம்மிடம் இருந்து அதையே தான் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் நான் போதுமான அளவுக்கு கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன். இனிமேல் கிளாமர் இல்லாத யதார்த்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். மேக்கப் கூட இல்லாமல் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று நடிகை ராய் லட்சுமி அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





