தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் நடித்த சாதனைப் பெண்மணி நடிகை மனோரமாதான். அவரை ஆச்சி என்றுதான் அழைப்பது வழக்கமாக உள்ளது. அந்த காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் துவங்கி இன்றைய தனுஷ் சூர்யா ரவிகிருஷ்ணா வரை பல ஹீரோக்கள் படங்களில் நடித்தவர் மனோரமா. துவக்கத்தில் ஏராளமான படங்களில் நடிகர் நாகேஷூக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார்.
பிறகு 1990 காலகட்டங்களில் பல படங்களில் அம்மா கேரக்டர்களிலும் அதன்பிறகு ஆத்தா பாட்டி போன்ற கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ஆச்சி மனோரமா. நடிகர் நாகேஷூக்கும் நடிகை மனோரமாவுக்கும் நல்ல நட்பும் அன்பும் இருந்தது. அதைவிட நாகேஷின் மனைவிக்கும் மனோரமாவுக்கும் நெருங்கிய தோழமை இருந்தது. அவரை குடும்ப உறவில் ஒருவராகவே அவர்கள் கருதினர். இந்நிலையில் ஒரு நாள் நாகேஷின் மனைவி மனோரமாவுக்கு திடீரென போனில் அழைத்தார்.
இங்கே வீட்டில் மிகவும் பிரச்னையாக இருக்கிறது. உடனே புறப்பட்டு வாங்க என்று அவர் அவசரமாக அழைத்தார். என்னமோ ஏதோ என்று பதறிக்கொண்டு உடனடியாக நாகேஷ் வீட்டுக்கு சென்றார் ஆச்சி மனோரமா. வீட்டுக்குள் இருந்த பொருட்கள் துணிமணிகள் எல்லாம் அலங்கோலமாக சிதறி கிடக்க பயந்து போனார் ஆச்சி. அப்போது வீட்டுக்குள் இருந்து நடிகர் ஆனந்தபாபு வெளியே வந்திருக்கிறார். அவரிடம், என்னப்பா பிரச்சனை என்று படபடப்பாக ஆச்சி கேட்டிருக்கிறார்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே சண்டை. நீங்களே உள்ள போய் பாருங்க என்று ஆனந்த் பாபு சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார். ஆச்சி உள்ளே போன போது நாகேஷூம் அவரது மனைவியும் கோபமாக இருந்துள்ளனர். என்னம்மா என்ன நடந்தது என்று நாகேஷின் மனைவியிடம் அவர் கேட்டபோது. அவரை போய் கேளுங்க என்று அவர் சொல்லியிருக்கிறார். உடனே நாகேஷிடம் ஆச்சி, என்னங்க பிரச்சனை என்று மனோரமா கேட்டபோது அவளையே போய் கேளுங்க என்று நாகேஷூம் சொல்லியிருக்கிறார்.
இதனால் மனம் வருத்தப்பட்ட மனோரமா, குடும்பம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். இதற்காக ஒருவருக்கொருவர் இப்படியா சண்டை போட்டுக் கொள்வது? ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து நடந்து கொண்டால் தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்று அவர்களுக்கு சின்சியராக அட்வைஸ் செய்திருக்கிறார். அதைக் கேட்டு இருவரும் சத்தமாக சிரித்துள்ளனர்.
அவர்கள் சிரித்ததை பார்த்து குழப்பமான மனோரமா, ஏன் இப்படி சிரிக்கிறீர்கள் என்று அதிர்ச்சியாக கேட்டிருக்கிறார். இன்னிக்கு தேதி என்னவென்று தெரியுமா என்று அவர்கள் கேட்க, அப்போதுதான் அன்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்று மனோரமா ஆச்சிக்கு நினைவுக்கு வந்திருக்கிறது. மனோரமாவை ஏப்ரல் 1ல் ஏமாற்ற நடிகர் நாகேஷ், நாகேஷின் மனைவி இப்படி சண்டை போட்டுக்கொண்டதாக ஏமாற்றி வரவழைத்து தன்னை கிண்டல் செய்தது அப்போதுதான் ஆச்சிக்கு தெரிந்திருக்கிறது.





