நடிகை நயன்தாரா, துவக்கத்தில் உள்ளூர் டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். அதன்பின் மனசினக்கரே என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானார். அந்த படத்தின் டைரக்டர்தான் இவருக்கு நயன்தாரா என பெயர் சூட்டினார். அந்த படத்திலேயே இவரது அழகு ரசிகர்களை ஈர்த்தது.
தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கிய ஐயா படத்தில், சரத்குமார் ஜோடியாக அறிமுகமானார். ஒருவார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் பாடலும், அந்த பாடல் காட்சியில் நயன்தாராவின் நளினமான நடனமும் ரசிகர்களின் மனதை வசீகரித்தது. தொடர்ந்து பல படங்களில் நயன்தாரா நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
ஒரு கட்டத்துக்கு பிறகு, நயன்தாராவை மையப்படுத்திய அவருக்கு முக்கியத்துவம் தருகிற படங்களும் வரத்துவங்கின. இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு உயர்ந்தார். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்தார்.
இப்போது ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா, சொந்த விமானத்தில்தான் வெளிநாடுகளுக்கு தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்று வருகிறார். வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளை அம்மாவாக கவனித்து வளர்த்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் படவாய்ப்புகள் நயன்தாராவுக்கு குவிகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான அன்னபூரணி, நயன்தாராவுக்கு 75வது படமாக அமைந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்கு சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த கனமழை, தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளும் முக்கிய காரணம். இந்நிலையில், சினிமாத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனநிலையில், ரசிகர்களுக்காக ஒரு பதிவை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 20 ஆண்டுகளை கடந்து, நான் இங்கே நிற்பதற்கு ரசிகர்களாகிய நீங்கள்தான் காரணம். எனக்கு உந்துசக்தியாக, இதய துடிப்பாக இருப்பது நீங்கள்தான். நீங்கள் இல்லாமல் சினிமா வாழ்க்கை பயணம் முழுமையடையாது. 20 ஆண்டு மைல் கல்லை எட்டுவதற்கு எனது பயணத்துக்கு உந்து சக்தியாக நீங்கள் இருந்ததை நன்றியுடன் கொண்டாடுகிறேன். எப்போதும் உங்கள் அன்பு எனக்கு வேண்டும் என பதிவிட்டுள்ளார்.





