தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். கிழக்கே போகும் ரயில் படத்தில் அவரை நாயகியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இன்றும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை வரிசையில் ராதிகாவுக்கு முதலிடம் உள்ளது. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தாய்கிழவி படம் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றது.
சென்னையில் டெலிவிஷன் மற்றும் ஓடிடி புரொடியூசர் கவுன்சில் ஆஃப் சவுத் என்ற புதிய அமைப்பின் தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திரைப்பட விமர்சகர்களான இன்ஃப்ளுயன்சர்ஸ் குறித்து கடுமையாக பேசி அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து ராதிகா சரத்குமார் பேசியதாவது, டிஜிட்டல் மீடியா வளர்ந்த பிறகு இந்த இன்ஃப்ளுயன்சர்ஸ் திரைப்படங்களைப் பற்றியோ அதில் நடிக்கும் நடிகர்களை பற்றியோ பெண்களைப் பற்றியோ அல்லது அவர்களின் குடும்பங்களைப் பற்றியோ மிகவும் மோசமாக பேசுவது ரொம்பவே ஈசியாக போச்சு.
ஏன்னா அவங்களை கேள்வி கேட்கவோ தட்டிக் கேட்கவே யாருமே இல்லை என்கிற தைரியம். இந்த மாதிரி தவறுகளுக்கு எதிராக நாங்கள் எல்லாம் குரல் கொடுத்திருக்கிறோம். பெரிய சண்டைகளும் வந்திருக்கிறது. அரசு இந்த விஷயத்தில் ரொம்பவே ஸ்டிரிக்ட் ஆக ஆக்சன் எடுக்க வேண்டும். மூன்று நான்கு பேர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாலே எல்லாம் சரியாகி விடும்.
சினிமா விமர்சனங்கள் என்ற பெயரில் இப்போது திரைப்படங்களைப் பற்றி ரிவ்யூ செய்வது யார் கையிலும் கட்டுப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது. இது உலகம் முழுவதுமே ஒரு பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. குறிப்பாக நம்ம ஊரில் இது ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு. ஏன்னா எல்லோருக்கும் கையில் ஃப்ரீயா ஒரு போன் ஃப்ரீ டேட்டா ப்ரீ வைஃபை கிடைக்கிறது. எங்கெங்கோ உட்கார்ந்துகிட்டு என்னென்னமோ பேசுகிறார்கள்.
ஆனால் அதையும் மீறி நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. சில நேரங்களில் படங்கள் நன்றாக இருந்தாலும் நல்லா இல்லே என்று தவறான ரிவ்யூ செய்கிறார்கள். இது வருத்தப்பட வைக்கிறது. இது ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக பார்க்க வேண்டும். இல்லை என்றால் இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போய்விடும் என்று நடிகை ராதிகா சரத்குமார் அப்போது கூறியிருக்கிறார்.





