இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026 – 27ம் ஆண்டுக்கான நிதி நிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் மரிய வில்சன் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். இதில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பெண்கள் தரப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது மகளிர் உரிமைத் திட்டம் மாதந்தோறும் 2500 ரூபாய் அனைத்து மகளிருக்கும் வழங்கும் திட்டம்தான். அதுகுறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. 1.31 கோடி பெண்கள் மட்டுமே இந்த திட்டத்தில் மாதம் ரூ. 1000 என திமுக ஆட்சியில் இருந்து பெற்று வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக இந்த திட்டத்தில் பயனடைந்து வந்த 1.31 கோடி பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்தார். இது பெரிய அளவில் பெண்களின் ஓட்டுகளை பெற்றுத் தரும் என்று அவர் கருதினார்.
ஆனால் ஏற்கனவே இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பெண்கள், இப்படி தேர்தல் நேரத்திலும் தங்களது ரூ. 5 ஆயிரம் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் திமுகவுக்கு எதிராக தவெகவுக்கு ஆதரவாக விசில் ஊதி விட்டனர். தவெகவின் பெண்கள் ஓட்டுகள் அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக அப்போது சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகியும் நிதிநிலை பட்ஜெட்டிலும் மகளிர் உரிமம் தொகை குறித்து முதல்வர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் யாரும் சலனமே காட்டாமல் இருப்பது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரவில்லை என்றுதான் தவெகவுக்கு ஓட்டுப் போட்டோம்.
ஆனால் இவர்களும் மாதந்தோறும் ரூ. 2500 தருவதாக தெரியலையே என்று புலம்ப துவங்கி விட்டனர். மேலும் ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம் என தேர்தல் வாக்குறுதிகளில் விஜய் அறிவித்த நிலையில் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இன்றைய நிதி நிலை பட்ஜெட்டில் இல்லாதது பெண்களை கடும் விரக்தியில் தள்ளியுள்ளது. வாட் ப்ரோ, இட் ஈஸ் ராங்க் ப்ரோ என்று பலரும் புலம்பி வருகின்றனர்.





