சூனா பானா என்றாலே நடிகர் வடிவேலு நடித்த காமெடி காட்சிளை நினைத்து பலருக்கும் சிரிப்பு வந்து விடும். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பாரதி கண்ணன் இதுகுறித்து கூறியதாவது, நான் டைரக்ட் செய்த கண்ணாத்தாள் என்ற படத்தில் வடிவேலு காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படத்தில் சூனா பானா சுப்பையா பாண்டியன் என்கிற அந்த காமெடி கேரக்டர் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
ஆடு திருடுவது பஞ்சாயத்தை கிளப்பி விடறது என அந்த படத்தில் அவரது காமெடி நன்றாக பேசப்பட்டது. அந்த படத்தில் ஒரு காட்சியில் நான் மதுவில் விஷம் கலந்து குடிக்க போகும் போது வடிவேலு அதை வாங்கி குடித்து விடுவார். நான் மதுவில் விஷம் கலந்துள்ளது என்று சொல்லியும் நம்பாமல் குடித்து விட்டு பிறகு உயிருக்கு போராடுவது போல் நடித்து கலாட்டா செய்திருப்பார்.
என்னுடைய படங்களில் ராஜ ராஜேஸ்வரி கண்ணாத்தாள் பண்ணாரியம்மன் போன்ற படங்களில் வடிவேலு நடித்திருக்கிறார். எனக்கு அவர் பெர்மனென்ட் ஆர்ட்டிஸ்ட் மாதிரிதான். அப்போது வடிவேலு டெய்லி சம்பளம் வாங்கிட்டு இருந்தார். சில கம்பெனி 20 ஆயிரம் சில கம்பெனி 30 ஆயிரம் சில கம்பெனி 40 ஆயிரம் என்று அவர் தினமும் சம்பளமாக வாங்கிக்கொண்டு இருந்தார்.
என்னுடைய கண்ணாத்தாள் படம் சாமி படம். கே பாலசந்தர் கம்பெனி என்பதால் ரூ. 30 ஆயிரம் அவருக்கு தினசரி சம்பளமாக பேசப்பட்டிருந்தது. டெய்லி டெய்லி எனக்கு சாயந்திரம் சம்பளம் கொடுத்திடணும் அண்ணே என்றார். சரி ஓகே என்று சொல்லி கண்ணாத்தாள் படத்தில் அவர் சூனா பானா கேரக்டரில் தினமும் நடித்துக்கொண்டு இருந்தார்.
ஒருநாள் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை காலையில் இருந்து எடுத்து மதியத்துக்குள் முடித்து விட்டோம். அவரது போர்ஷன் முடிந்து விட்டது. உங்க சீன் முடிந்தது. போகலாம் என்று சொன்னால் அவர் போகாமல் இல்லேண்ணா நான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டார். நானும் விட்டுவிட்டேன். மாலை 4 மணி ஆகிவிட்டது. அப்போதும் உங்க போர்ஷன் தான் மதியமே முடிச்சுட்டோமே, போங்க என்றால் போக மாட்டேன் என்று மறுக்கிறார்.
அதன்பிறகு அவரிடம் விசாரித்தால் அதற்கு ஒரு காரணம் இருக்குண்ணே என்றார். என்ன பிரச்னை சொல்லுங்க என்று கேட்ட போது, இல்லண்ணே இது பெரிய கம்பெனி. தினமும் 30 ஆயிரம் சம்பளம் பேசியிருக்காங்க. மதியம் வரை தான் நடிச்சிருக்கேன். 15 ஆயிரம் ரூபா தான் கொடுப்பாங்களா, மீதி 15 ஆயிரம் ரூபா தர மாட்டாங்களா அண்ணே என்று கேட்டார். அதெல்லாம் கவலைப்படாதீங்க. 30 ஆயிரம் ரூபாய்க்கு நான் பொறுப்பு நீங்க கௌம்புங்க என்று சொல்லி அனுப்பி வைத்தேன் என்று இயக்குனர் பாரதிகண்ணன் அதில் கூறியிருக்கிறார்.





