சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 50 ஆயிரம் மாணவ மாணவியர் திருக்குறள் ஒப்புவிக்கும் திருக்குறள் மாநாடு நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, திருக்குறளின் பெருமைகள் குறித்து அந்த மாநாட்டில் பேசினார். சைதன்யா கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டை கவிஞர் வைரமுத்து முன்னதாக துவக்கி வைத்தார்.
இந்த மாநாடு குறித்து கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பதிவில் கூறியதாவது, 50 ஆயிரம் பள்ளி மாணவர்கள் நேரிலும் இணையத்திலும் கலந்து கொண்டு திருக்குறள் ஒப்புவித்த திருக்குறள் மாநாட்டை தொடங்கி வைத்தேன். சைதன்யா பள்ளிகள் நிகழ்த்திய இந்த திருக்குறள் மாநாடு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நிகழ்ந்தது.
இந்த நிகழ்வு லண்டன் உலக சாதனை புத்தகத்தில் (வேஃர்ல்ட் ஆஃப் ரெக்கார்ட்ஸ் லண்டன்) நேற்று இடம் பிடித்து விட்டது. பெருமிதத்தோடு பேசினேன். கடல் போல் திரண்டு இருக்கும் மாணவ கண்மணிகளே. நேற்று பிரிக்ஸ் மாநாட்டுக்கு வந்திருந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு பரிசு வழங்கினார்.
அது கோலார் தங்கமோ கோகினூர் வைரமோ மாணிக்க பேழையோ மரகத மகுடமோ அல்ல; ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை தான் அவர் வழங்கினார். அவருக்கு தெரியும். இந்தியாவின் பெருஞ்செல்வம் திருக்குறள் என்று. நீங்கள் திருக்குறளை பள்ளி பாடமாக அல்லாமல் வாழ்க்கை பாடமாக கற்றுக் கொள்ள வேண்டும்.
அம்மா அப்பா சண்டையில் கடுமொழி பேசினால், இனிய உளவாக இன்னாத கூறல் என்ற குறள் சொல்லித் திருத்துங்கள். ஒரு மாணவன் உங்கள் பென்சிலை திருடிவிட்டால் இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற குறள் சொல்லி ஒரு முறை மன்னித்து விடுங்கள். மதிய உணவு வேளையில் ஒரு மாணவி சோறு கொண்டு வரவில்லை என்றால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற குறளை சொல்லி ஆளுக்கு ஒரு கவளம் அள்ளிக் கொடுங்கள்.
திருக்குறள் ஒவ்வொரு நாளும் பயன்படும் உயர்ந்த வாழ்க்கை நூல். பிறமொழி கற்பது பிறகு. தாய் மொழி தான் முதலில். தாய்மொழி கண் போன்றது. பிற மொழி கண்ணாடி போன்றது. கண் இல்லாமல் கண்ணாடியால் ஏது பயன்? ஒரு குறள் சமுதாயம் எழுக; குறள் குழந்தைகள் வாழ்க என்று வாழ்த்தினேன் என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து பெருமிதமாக கூறியிருக்கிறார்.





