கடந்த 2021ம் ஆண்டில் டிசம்பர் 17ம் தேதி சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் புஷ்பா. தெலுங்கில் வெளியாகி பிறகு தமிழ், கன்னடம், இந்தி என பிறமொழிகளிலும் வெளியான இந்த படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. எதிர்பார்த்ததை காட்டிலும் இந்த படம் பல நூறு கோடி ரூபாய் மிகப்பெரிய வசூலை அள்ளிக் கொடுத்தது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். மேலும் ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலில் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அசத்தியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அல்லு அர்ஜூனுக்கு இந்த படம் சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றுத் தந்தது.
இந்நிலையில் கடந்த 2.5 ஆண்டுகளாக புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. பான் இந்தியா படமாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, புஷ்பா 2 படம் ரிலீஸாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் படப்பிடிப்பு மேலும் நீண்டதால் டிசம்பர் 6ம் தேதி ரிலீஸ் தேதி அறிவித்தது. தற்போது ஒருநாள் முன்னதாக டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா 2 படம் ரிலீஸாக இன்னும் 45 தினங்கள் உள்ள நிலையில், படத்தில் இருந்து 2 பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை, ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் புஷ்பா 2 படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ. 1000 கோடி வியாபாரத்தில் கடந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
புஷ்பா 2 படம் அனைத்து மொழிகளிலும் தியேட்டர் வெளியீட்டு உரிமை 660 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 220 கோடிக்கும், வட இந்தியாவில் ரூ. 200 கோடிக்கும், தமிழ்நாட்டில் ரூ. 50 கோடிக்கும், கர்நாடகாவில் ரூ. 30 கோடிக்கும், கேரளாவில் ரூ. 20 கோடிக்கும், வெளிநாடுகளில் ரூ. 140 கோடிக்கும் புஷ்பா படத்தின் திரையரங்கு உரிமை விற்பனையாகியுள்ளது.
மேலும் புஷ்பா 2 படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ. 85 கோடிக்கும், இசை உரிமை ரூ. 65 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை 275 கோடி ரூபாய் கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாக உள்ள புஷ்பா 2 படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





