தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல படங்களில் சண்டை காட்சிகளில் அடியாட்களில் ஒருவராக வந்து ஹீரோக்களுடன் சண்டை போட்டவர் நடிகர் பொன்னம்பலம். பிறகு கமல்ஹாசன் அவரை மைக்கேல் மதன காமராஜன் படத்தில் சிறிய காமெடி ரோலில் நடிக்க வைத்தார். மேலும் விஜயகாந்த் தனது படங்களில் பிரதான சண்டை காட்சிகளில் பொன்னம்பலம் நடிக்க வாய்ப்பளித்தார். நடிகர் பொன்னம்பலம் என்பதை விட கபாலி என்ற கேரக்டரில் நடித்து அவர் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகாந்த் எப்போதுமே திறமையானவர்களை ஊக்குவித்து அவர்களை வாய்ப்பளித்து முன்னுக்கு கொண்டு வரும் குணம் கொண்டவர். அதனால் தனது பல படங்களில் வில்லன் கேரக்டரில் பொன்னம்பலத்தை நடிக்க வைத்தார். அதே போல் தனது அலுவலகத்துக்கோ வீட்டுக்கோ பொன்னம்பலம் வந்தால் அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்து பொன்னம்பலத்தை சாப்பிட வைத்து சந்தோஷப்படுவார்.
விஜயகாந்த் அவரது படங்களில் பொன்னம்பலத்துக்கு வாய்ப்பு தந்தவர். குறிப்பாக சொக்கத்தங்கம் மாநகர காவல் பரதன் செந்தூரப்பாண்டி ஆனஸ்ட் ராஜ் பெரிய மருது தர்மசக்கரம் வீரம் வெளைஞ்ச மண்ணு வல்லரசு தவசி என பல படங்களில் பொன்னம்பலம் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருக்கிறார். இப்படி பல படங்களில் அவர் நடிக்க கேப்டன் வாய்ப்பு தந்திருக்கிறார்.
ஆனால் விஜயகாந்த் மறைந்த போது நடிகர் பொன்னம்பலம் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. பல படங்களில் கேப்டனுடன் நடித்தவர், கேப்டனின் அன்புக்கு உரியவராக இருந்த நடிகர் பொன்னம்பலம் வராதது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொன்னம்பலம் சமீபத்தில் பேசியிருக்கிறார்.
ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பொன்னம்பலம் கூறியதாவது, எங்க அக்கா இறந்துட்டாங்க. திடீர்னு சொன்னா எனக்கு நெஞ்சுவலி வந்துடும்ன்னு நாசூக்காக கார்ல போகும்போது என்கிட்ட சொன்னாங்க. அப்ப கூட நெஞ்சு வலி மாத்திரை பிபி மாத்திரை எல்லாம் போட்டுட்டு தான் நான் போனேன்.
அதே மாதிரி கேப்டன் மறைவுக்கு நான் நேர்ல அஞ்சலி செலுத்த போகாததற்கு காரணம் யார் யாரோ ஏதோ சொல்லுவாங்க. ஆனா கண்டிப்பா நான் கேப்டன் சாவுக்கு போயிருந்தால் அவர் கூட என்னையும் சேர்த்து தூக்கிட்டு போயிருப்பாங்க. என்னால அவரை அந்த கோலத்துல பார்க்க முடியாது. கேப்டன் மேல நான் அவ்வளவு உயிர் வெச்சு இருந்தேன் என்று நடிகர் பொன்னம்பலம் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.





