கானா பாடகராக இருந்த கருணாஸை திரைப்படத்தில் காமெடி நடிகராக மாற்றியவர் இயக்குனர் பாலா. சூர்யா லைலா நடித்த நந்தா என்ற படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கேரக்டரில் கருணாஸ் நடித்திருந்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை தனது அருமையான நடிப்பால் கருணாஸ் கவர்ந்து விட்டார்.
குறிப்பாக கோர்ட்டில் தனக்கு சிறை தண்டனை வழங்கிய மாஜிஸ்திரேட் வீட்டிலேயே புகுந்து திருடுவதும் அங்கு வரும் இரண்டு மாமிகளிடம் சாதுர்யமாக பொய் பேசி சமாளித்து அவர்களை ஏமாற்றிவிட்டு வேனில் அந்த வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் திருடிச் செல்வதும் பெரிய அளவில் ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்தது.
ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் விஜய் அஜீத்குமார் சூர்யா என பல ஹீரோக்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்த கருணாஸ் ஒரு கட்டத்தின் கதையின் நாயகனாகவும் நடித்து அசத்தினார். திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி என அவர் ஹீரோவாக நடித்த படங்களும் பெரிய வரவேற்பை பெற்றன.
இப்போது நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ்சும் சினிமாவுக்குள் வந்து விட்டார். நெடுஞ்சாலை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கென் கருணாஸ் அசுரன் விடுதலை 2 படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார். அவரே டைரக்ட் செய்து ஹீரோவாக அறிமுகமான யூத் படம் பெரிய வெற்றியை பெற்றது.
இப்போது கென் கருணாஸ், வெற்றிமாறன் இயக்கத்தில் ராஜன் வகையறா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அடுத்து கருணாஸ் தயாரிப்பில் கட்டா குஸ்தி பட இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கும் ஒரு படத்திலும் கென் கருணாஸ் நடிக்க உள்ளார். இதற்கிடையே நடிகர் கருணாஸ் ஆரம்ப காலத்தில் திரைப்பட வினியோகஸ்தராக இருந்து பல படங்களை வினியோகமும் செய்த தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கருணாஸ் கூறியதாவது, இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றது. ஆனாலும் அந்தப் படத்தை விநியோகம் செய்ததில் ஒரு விநியோகஸ்தராக எனக்கு 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்று நடிகர் கருணாஸ் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





