கடந்த 2024ம் ஆண்டில் தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய்பல்லவி நடித்த அமரன் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த படத்தை சொந்தமாக தயாரித்து இருந்தார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை படமாக இது உருவாகி இருந்தது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்த இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் நடிகர் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபாக்கா வர்கீஸ் கேரக்டரில் நடிகை சாய்பல்லவியும் நடித்திருந்தனர். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் 300 கோடி ரூபாய்க்கு வசூலை அள்ளியது.
மத்திய அரசு சார்பில் இந்தியாவில் பல மொழிகளில் வெளியாகும் சிறந்த திரைப்படங்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்படங்கள் சிறந்த இயக்குனர் சிறந்த நடிகர் சிறந்த நடிகை சிறந்த இசையமைப்பாளர் சிறந்த ஒளிப்பதிவாளர் சிறந்த கவிஞர் என பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் மத்திய அரசின் 72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இந்திய ஜனாதிபதி திரௌவுபதி முர்மு பங்கேற்று திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் அமரன் திரைப்படத்திற்கு மூன்று முக்கிய தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
அமரன் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குனர் விருதும், அமரன் படத்துக்கு இசையமைத்த ஜீவி பிரகாஷ் குமாருக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதும் சிறந்த படத்தொகுப்புக்கான எடிட்டர் விருது அமரன் படத்துக்காக ஆர் கலைவாணன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. அமரன் படத்துக்கு சிறந்த இயக்குனர் சிறந்த இசையமைப்பாளர் சிறந்த படத்தொகுப்பு என 3 தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்தன் வரதராஜன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமரன் படத்திற்காக வாங்கிய தேசிய விருதை காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். முகுந்த் வரதராஜனின் பெற்றோர் கைகளில் அந்த விருதை கொடுத்து ஆசி பெற்றிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது படத்தின் வெற்றிக்காக நன்றியுடன் நடந்துக்கொண்ட அவரை ரசிகர்களை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





