தமிழ் சினிமாவில் நடிப்பும் இசையும் மிக முக்கியமானதாக ரசிகர்களின் மனதில் இரண்டற கலந்து நிற்கிறது. இசையால் மட்டுமே வெற்றி பெற்ற படங்களும் இருக்கின்றன. இன்றும் நல்ல பாடல்கள் கொண்ட படங்களுக்கு ரசிகர்களின் முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. ஜெயிலர் 2 படத்தின் அபார வெற்றிக்கு அனிருத் பின்னணி இசை முக்கிய பலமாக இருந்து படத்தை ஜெயிக்க வைத்தது.
அதே நேரத்தில் இளையராஜா 50 ஆண்டுகளுக்கு முன் இசையமைத்த முதல் பாடல் அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலை இப்போதும் ரசிக்க முடிகிறது. கேவி மகாதேவன் எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்த கருப்பு வெள்ளை படங்களின் பாடல்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் நடித்த படங்களின் பாடல்கள் இப்போதும் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன.
ஆனால் இன்றைய இளம் இசையமைப்பாளர்களின் இசை படத்திலும் படம் வெளியான சில வாரங்களுக்கும் வைரலாகி ஜென்ஸி கூட்டத்தில் அதிக வரவேற்பை பெறுகிறது. ஆனால் நாளடைவில் அத்தகைய பாடல்கள் மங்கி விடுகின்றன. வெறும் இசை கூச்சலாக பாடல் வரிகளே தெரியாத அளவுக்கு வரும் இன்றைய பாடல்கள் சில மாதங்களுக்கு கூட நிலைத்து நிற்பது இல்லை.
இப்போதும் இளையராஜா இசையமைத்த 80 – 90 காலகட்ட பாடல்கள் எஸ்பிபி பாடல்கள் கேஜே ஜேசுதாஸ் பாடல்கள் மனோ பாடல்கள் சித்ரா பாடல்கள் எஸ் ஜானகி பாடல்கள் ஸ்வர்ணலதா பாடல்கள் என அவர்களின் பாடல் தொகுப்புகளை மணிக்கணக்கில் ரசித்து கேட்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் அனிருத் சாய் அபயங்கர் பாடல்கள் எல்லாம் இப்படி கேட்கப்பட வாய்ப்பே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறுகையில் இளையராஜா ஏஆர் ரகுமானின் பாடல்கள் 25 ஆண்டுகள் 30 ஆண்டுகள் கடந்தும் நிற்பது போல அனிருத் சாய் அபயங்கர் பாடல்கள் அடுத்த தலைமுறைக்கு நிற்குமா? என்பது சந்தேகம் தான் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் வெஸ்டர்ன் சாயல் வந்து நமது இசையின் ஆன்மாவே போய்விட்டது. இந்திய இசையை உருவாக்குங்கள் என ஏஆர் ரகுமான், அனிருத்துக்கு கூறியது மிகச்சிறந்த அறிவுரை. உச்சத்தில் இருக்கும்போதே புதுமையை செய்யாவிட்டால் அடுத்து வரும் திறமையாளர்களால் நமக்கான இடம் சரியத் தொடங்கி விடும் என்றும் அவர் அந்த நேர்காணலில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எச்சரித்துள்ளார்.





