நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பொக்கிஷமான கலைஞர் என்றால் அது மிகையல்ல. ஒரு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக அவர் எடுத்த முயற்சிகளும் ரிஸ்க்குகளும் தான் தமிழ் சினிமாவை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றன. நடிப்புக்காக தன் உயிரையே துச்சமாக கருதும் ஒரு கலைஞன் என்றால் அது கமல்ஹாசனாக மட்டும்தான் இருக்க முடியும்.
இயக்குனர் சந்தானபாரதி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் குணா. இந்த படத்தில் கமலுடன் ரோஷினி ரேகா ஜனகராஜ் அஜய் ரத்தினம் எஸ்பி பாலசுப்ரமணியம் எஸ் வரலட்சுமி கிரஷ் கர்னார்ட் சரத் சக்சேனா காகா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த 1991ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. பாலகுமாரன் கதை வசனம் எழுதியிருந்தார்.
இந்த குணா படத்தின் முதல் தலைப்பு மதிகெட்டான் சோலை என்பதுதான். மதிகெட்டான் சோலை என்பது மனதை மயக்கி, வழி தவறச் செய்யும் காடு என்ற பொருளைக் கொண்ட பெயராக இருந்தது. படத்தின் நாயகன் குணாவின் மனநிலையையும், அவர் வாழும் மர்மமான உலகையும் இந்தத் தலைப்பு மிக அழகாக பிரதிபலித்தது.
ஆனால் இந்தப் பெயர் வித்தியாசமாகவும் வணிக ரீதியாக சற்று ஆபத்தானதாகவும் இருக்கும் என்று கருதிய படக்குழு இறுதியில் படத்தின் நாயகனின் பெயரான குணாவையே படத்தின் தலைப்பாக தேர்வு செய்தது. அந்த படத்தில் இடம்பெற்ற கொடைக்கானல் குகை ஒன்றுதான் இப்போது குணா குகை என்ற பெயரில் மிகவும் பிரபலமாகி விட்டது. மஞ்சும்மெல் பாய்ஸ் மலையாள படம் கூட அந்த குணா குகையை மையப்படுத்தி உருவானது.
இதில் இன்னும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுகுறித்து பேசிய படத்தின் நாயகன் நடிகர் கமல்ஹாசன், குணா என்ற டைட்டிலை விட மதிகெட்டான் சோலை என்ற தலைப்புதான் படத்தின் ஆன்மாவை முழுமையாக வெளிப்படுத்துகிறது. அதைத்தான் நான் மிகவும் விரும்பினேன் என்றும் கூறியுள்ளார்.
ஒரு திரைப்படத்தின் தலைப்புக்குப் பின்னாலும் இவ்வளவு அழகான கதை இருக்கிறது என்பதற்கு குணா படம் ஒரு சிறந்த உதாரணம். ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் கதைக்கு தான் பஞ்சம் என்றால் டைட்டிலுக்கு பலத்த பஞ்சம் நிலவுகிறது. அதனால் பழைய படங்களின் டைட்டில்களை புதிய படங்களுக்கு வைத்து ரசிகர்களை இயக்குனர்கள் வெறுப்பேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.





