தமிழ்நாட்டில் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2005ம் ஆண்டில் துவங்கியவர் கேப்டன் விஜயகாந்த். சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக வலம் வந்த கேப்டன், அரசியல் களத்திலும் நட்சத்திரமாக ஜொலித்தார். 2011 தேர்தலில் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவராகவும் சட்டசபையில் அமர்ந்தார்.
நடிகர் விஜயகாந்த் தமிழக அரசியல் களத்தில் மக்களின் செல்வாக்கும் வரவேற்பும் பெற்ற தலைவராக அவர் இருந்தார். ஜெயலலிதா ஆட்சியின் போது தேமுதிக 2வது இடத்தில் எதிர்கட்சியாகவும் ஸ்டாலின் தலைமையில் இருந்த திமுக 3வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு திமுகவை விட தேமுதிக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவராக கேப்டன் இருந்தார்.
ஆனால் நோய் பாதிப்பு காரணமாக அவர் 71 வயதில் மறைந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், இப்போது தேமுதிக பொதுச் செயலாளராக கட்சியை நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவாகவும் அவர் உள்ள நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வருகிறார். மேலும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இடைத்தேர்தலில் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
மதுராந்தகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியதாவது, இந்த இடைத்தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை செலவாகிறது. யாருடைய காசு? மக்களுடைய வரிப்பணம்.
மக்கள் அன்றாடம் வேர்வை சிந்தி சம்பாதிச்ச காசுல இதுபோன்ற துரோகிகளுக்கு ஒரு தேர்தல் தேவையா என்ற கேள்வியை மக்களின் கேள்வியாக தான் நான் கேட்கிறேன். ஓட்டு போட்டு ஜெயிச்ச நீங்க 10 நாள்ல என்னத்தை பார்த்து இன்னொரு கட்சிக்கு நீங்க ஓடினீங்க? எதுக்கு போறீங்க?
ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்கும் உங்களை வெற்றி பெற உழைத்த கட்சிக்கும் நீங்கள் துரோகம் செய்துவிட்டு போனால் மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். துரோகியாக தான் பார்ப்பார்கள். ஒரு ஊரிலாவது உங்கள் முகத்தை காட்டி உங்களால் ஓட்டு கேட்க முடிகிறதா? எங்கே சென்றாலும் மக்கள் ஓட ஓட அடிச்சு விரட்டறாங்க என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார்.





