நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. ஆனால் சில படங்கள் எதிர்பாராத விதமாக பெரிய அளவில் பிளாப் ஆகி இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒரு படமாக கோப்ரா படம் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தந்தது.
ரசிகர்களை திகில் காட்சிகளால் மிரட்டிய டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் கோப்ரா படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த 2022ம் ஆண்டில் வெளியானது. மிகப்பெரிய பட்ஜெட்டில், விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்த இந்த படம், தோல்வி படமாக அமைந்தது.
கோப்ரா படம், கொரோனா காலகட்டத்துக்கு முன் துவங்கப்பட்டு, தொடர்ந்து லாக்டவுன் காரணமாக இடையில் பலமுறை தடைபட்டு பின்னர் ஒருவழியாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு வெளியான படமாகும். ஆனால் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை புரியாத கதையாக இருந்தது. இதில் 2 கேரக்டர்களில் விக்ரம் நடித்திருந்தார்.
இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டி காலனி 2 பாகம் வெளியாகிறது. நாளை இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இதில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். டிமாண்டி காலனி முதல் பாகம் மிகப்பெரிய த்ரில் படமாக அமைந்து ரசிகர்களை கவர்ந்தது. அதுபோல் இரண்டாம் பாகமும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டிமாண்டி காலனி 2 படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளுக்காக தொடர்ந்து அருள்நிதி, டைரக்டர் அஜய் ஞானமுத்து உள்ளிட்டோர் அடிக்கடி நேர்காணல் தந்து வருகின்றனர். அப்போது டைரக்டர் அஜய் ஞானமுத்து கோப்ரா படம் தோல்வி குறித்து ஒரு உண்மையை வௌிப்படையாகவும், ஆவேசமாகவும் கூறியிருக்கிறார்.
கோப்ரா பட இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியதாவது, நான் ஒரு கதை சொன்னேன். அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தயாரிப்பாளர் வேறு ஒரு கதை சொல்லி அதை படமாக்க சொன்னார். அவர் சொன்ன கதைக்கு நான் ஸ்கிரீன் பிளே எழுதிய போதும், அந்த கதையை என்னால் மாற்ற முடியவில்லை. அந்த கதையை ஏற்றுக்கொண்டதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறியிருக்கிறார். கோப்ரா படத்தின் கதை தன்னுடையது அல்ல, தயாரிப்பாளர் சொன்னது என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.





