தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தில் தொடங்கி விடுதலை திரைப்படம் வரை வெற்றிமாறன் தொட்ட சிகரங்கள் ஏராளம். இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக இருந்த அவர், அது ஒரு கனாக்காலம் படத்தின் சூட்டிங்கின்போது நடிகர் தனுஷின் வடசென்னை தொடர்பான கதையை கூறி இருக்கிறார்.
அந்தக் கதையில் இருக்கும் ஒரு சின்ன பகுதி தான் பைக் திருட்டின் பின்னணி. பிறகு யோசித்த வெற்றிமாறன், பைக் திருட்டைப் பற்றியே படம் எடுக்கலாமே என முடிவெடுத்து பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கினார். அப்போது தொடர் தோல்விகளை கொடுத்துக் கொண்டிருந்த தனுஷிற்கு, பொல்லாதவன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
இந்தப் படத்திற்கு பிறகு, மதுரைக்குச் சென்ற அவர் ஆடுகளத்தை எடுத்தார். சேவல் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், அழுக்கு லுங்கி, அடர்ந்த தாடி, பெரிய சைஸ் சட்டை என கருப்பு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார் தனுஷ். இந்தப் படத்தின் திரைக்கதை மிக நேர்த்தியாக அமைய, வெற்றிமாறனுக்கு தேசிய விருது தேடி வந்தது.
இதன் பிறகு விசாரணை, வடசென்னை படங்களை இயக்கிய வெற்றிமாறன், அசுரன் படத்திற்கும் தேசிய விருதை பெற்றார். இதேபோல் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதுகளை, ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படத்திற்கு தனுஷ் பெற்றுக் கொண்டார். தற்போது விடுதலை படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் வெற்றிமாறன், அதற்கு அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடி வாசலை இயக்குகிறார்.
தற்போது கங்குவா படத்தில் பிஸியாக இருக்கும் சூர்யா, அதன் படப்பிடிப்பை முடித்த பிறகு, சுதா கொங்கரா உடன் இணைகிறார். இந்த படத்தில், சூர்யாவுக்கு சகோதரராக துல்கர் சல்மான் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த திரைப்படத்திற்குப் பிறகு, அவர் வாடிவாசலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிசியாக ஓடிக்கொண்டிருக்கும் வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கரா இருவரும் நடிகர் விஜயை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறார்கள் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய்க்கென தனி ப்ராஜெக்ட்டை வெற்றிமாறன் வைத்திருப்பதாகவும், ஆனால் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து இருப்பதால் இருவரும் இணைய முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதேபோல் சுதா கொங்கராவும் விஜயை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார் என்றும், எதிர்காலத்தில் இது நடக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷின் இந்த பேச்சால் உற்சாகமடைந்துள்ள விஜய் ரசிகர்கள், இந்த இரண்டு இயக்குனர்களும் விரைவில் தங்கள் தளபதியை இயக்க வேண்டும் என்று ஆசையோடு இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.





