தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக கல்லூரி மாணவனாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் முரளி. குறிப்பாக அவர் நடித்த இதயம் புது வசந்தம் சுந்தரா டிராவல்ஸ் பொற்காலம் காலமெல்லாம் காதல் வாழ்க கீதாஞ்சலி வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படங்களாகும்.
நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா, பாணா காத்தாடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தார். இதற்கிடையே நடிகர் முரளி மறைந்து விட்டார். இப்போது நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளியும் படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் தமிழ் சினிமாவில் முரளி அளவுக்கு அவரது மகன் அதர்வா இன்னும் முக்கிய நட்சத்திரமாக ஜொலிக்க முடியாமல் தொடர்ந்து வெற்றிக்காக போராடி வருகிறார். அவர் நடித்த சண்டி வீரன் 100 பரதேசி ஈட்டி கணிதன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் அவருக்கான வெற்றிப் படங்கள் இன்னும் பெரிய அளவில் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால் இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி என்ற படத்தில் ஒட்டுப்பொறுக்கி என்ற கேரக்டரில் நடிகர் அதர்வா வேறுபட்ட ஒரு நடிப்பை தந்திருந்தார். நிச்சயமாக இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. மிக சிறந்த அழுத்தமான நடிப்பு திறனை வெளிப்படுத்திய நிலையிலும் அதர்வா தொடர்ந்து பெரிய நடிகர் வரிசைக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அதர்வா கூறியதாவது, பரதேசி படத்தின் சூட்டிங் 2 ஆண்டுகளுக்கு மேல எடுத்தாங்க. அந்த கெட்டப்புல எங்கேயும் வெளியே போக முடியல. வேற வழியே இல்லை. அரை மண்டையோட நான் எங்கு வெளியே போறது?
ஏதாவது ரொம்ப முக்கியமான வேலையாக இருந்தால் தலைக்கு கேப் போட்டுவிட்டு தான் வெளியே போவேன். லைசன்ஸ் இருக்குற போட்டோவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று என்னை ஏர்போர்ட்டுக்கு உள்ள விட முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் விஷயத்தை சொல்லி புரிய வைக்க ரொம்பவும் கஷ்டப்பட்டேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் அதர்வா கூறியிருக்கிறார்.





