திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தில், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். அடுல்ட் காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அன்றைய தேதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும், இளைய தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் இயக்குனர் படத்தை எடுத்திருப்பதாகவும் ஆதிக் ரவிச்சந்திரனை பலர் சாடினர். ஆனால், இதற்கெல்லாம் முரணாக திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் செம ஹிட் அடித்தது.
இளைஞர்கள் கொடுத்த ஆதரவால் படம் திரையரங்குகளில் வெற்றி விழா காண, கோலிவுட்டில் ஆதிக் ரவிச்சந்திரன் அறியப்பட்டார். இதன் பிறகு அவர் சிம்புவை வைத்து, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தை எடுத்தார்.
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம், ஆரம்பத்திலேயே பல பிரச்சனைகளால் ஆட்டம் கண்டது. சிம்பு ஒழுங்காக சூட்டிங் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவ, பல விவகாரங்களைக் கடந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம், நடிகர் சிம்புதான் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார்.
இது ஒரு பக்கம் இருக்க, ஆதிக் ரவிச்சந்திரன் ஹெச் வினோத் – அஜித் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார். பின்னர், பிரபுதேவாவை வைத்து பகிரா என்னும் படத்தையும் எடுத்தார். இந்தத் திரைப்படமும் இயக்குனருக்கு தோல்வியை கொடுத்தது. இந்த நிலையில் தற்போது அவர், நடிகர்கள் விஷால், எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன் ஆகியோரை வைத்து மார்க் ஆண்டனி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இதன் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. செல்போன் மூலம் டைம் ட்ராவல் செல்வதை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது, டிரைலரில் தெரிகிறது. இதில் எஸ் ஜே சூர்யாவின் கலக்கலான வசனங்கள், சில்க் ஸ்மிதாவின் என்ட்ரி, பஞ்சு மிட்டாய் பாடலின் ரீமிக்ஸ் ரகம் என டிரைலர் முழுவதும் கொண்டாட்ட களமாக அமைந்திருக்கிறது. இதனை மீண்டும் மீண்டும் பார்த்து வரும் ரசிகர்கள், நிச்சயமாக மார்க் ஆண்டனி திரைப்படம் நடிகர் விஷாலுக்கும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் திருப்புமுனையை கொடுக்கும் என்று தெரிவித்து வருகின்றனர். வரும் 15ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.





