வசந்த், எஸ்.ஜே.சூர்யா, ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரிமுத்து. இவர்கள் தவிர கவிப்பேரரசு வைரமுத்துவிடமும் மூன்று வருடங்கள் உதவியாளராக இருந்தவர். மாரிமுத்துவின் கையெழுத்து அவ்வளவு அழகாக இருந்ததன் காரணமாக வைரமுத்து தன்னிடம் உதவியாளராக சேர்த்துக்கொண்டார். வைரமுத்து சொல்ல சொல்ல பாடல்களையும், கவிதையையும் எழுதுவது மாரிமுத்துவின் வேலை.
உதவி இயக்குநராக இருந்துவிட்டு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் அந்த இரண்டு படங்களும் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. குறிப்பாக கண்ணும் கண்ணும் படத்தில் சிறிது பிசகினாலும் தவறாக போகும் ஒன்லைனை வைத்துக்கொண்டு தனது மேக்கிங்கில் அட்டகாசம் செய்திருந்தார் மாரிமுத்து. பாடல்கள் எல்லாம் ஹிட்டாகின. வடிவேலுவின் காமெடியும் ஒர்க் அவுட் ஆனது.
இயக்குநராக வெல்ல முடியாததை அடுத்து நடிகராக களமிறங்கினார். யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல படங்களில் நடித்தார். அலட்டிக்கொள்ளாமல் வெகு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவது மாரிமுத்துவின் ஸ்பெஷாலிட்டின். கடைசியாக அவரது நடிப்பில் ஜெயிலர் படம் ரிலீஸானது. மேலும் கமலுடன் இந்தியன் 2, சூர்யாவுடன் கங்குவா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய திரையில் எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலம் ஆனாரோ அதேபோல் சின்னத்திரையில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் நெடுந்தொடரில் நடித்து வெகு பிரபலம் ஆனார். அந்த நெடுந்தொடரில் மாரிமுத்து ஏற்றிருந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் பரிச்சயம். அதில் அவர் பேசிய வசனம், அவரது உடல் மொழி எல்லாம் இளைஞர்களையும் கவர்ந்தது. இதனால் இளைஞர்களும் அந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தனர். டிஆர்பில் நம்பர் ஒன்றாக அந்த சீரியல் இருக்க மாரிமுத்துவும் ஒரு காரணம்.
இப்படிப்பட்ட சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தேனி மாவட்டம் பசுமலைதேரியில் தகனம் செய்யப்பட்டது. மாரிமுத்து உயிரிழந்ததை அடுத்து ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை யார் ஏற்பார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி இந்த கதாபாத்திரத்தை ஏற்கவிருப்பதாக சில நாட்களாக தகவல் பரவியது.
இந்நிலையில் தனியார் ஊடகத்துக்கு இதுகுறித்து பேட்டி அளித்த அவர், “ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்கும்படி என்னிடம் சீரியல் டீம் பேசியது உண்மைதான். ஆனால் நான் சினிமாவில் பிஸியாக இருக்கிறேன். இப்போதுகூட ஒரு ஷூட்டிங்கில்தான் இருக்கிறேன். சீரியலில் நடிப்பதா வேண்டாமா என்பது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை” என்றார்.





