சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய ஹெச் வினோத், அஜித்துடன் அடுத்தடுத்த படங்களில் இணைந்தார். இதில் முதல் திரைப்படமான நேர்கொண்ட பார்வை பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான, பிங்க் திரைப்படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டது. முதல் இரண்டு திரைப்படங்களிலும் மிக நேர்த்தியான திரைக்கதையை எடுத்திருந்த ஹெச் வினோத், எதற்காக ரீமேக் படத்தை இயக்குகிறார் என்று கேள்வி எழுந்தது.
அதேசமயம், அஜித் – போனி கபூர் விருப்பத்தின் பெயரிலேயே அவர் படத்தை இயக்குவதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை புரிந்தது. இதன்பிறகு, அஜித்துடன் வலிமை திரைப்படத்தில் இறங்கினார் ஹெச் வினோத்.
கொரோனா கட்டுப்பாடுகளால், இந்த திரைப்படத்தின் பணிகளில் சுணக்கம் ஏற்பட, ஹெச் வினோத் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காமல் போனது. முதல்முறையாக இயக்குனரின் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதையடுத்து மூன்றாவது முறையாகவும், அஜித் உடனே இணைந்தார் ஹெச் வினோத்.
இந்த முறை வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த நிலையில், ஹெச் வினோத் அடுத்ததாக யாருடன் இணையப் போகிறார் என்று கேள்விகள் எழ, யாரும் எதிர்பாராத நேரத்தில் கமல்ஹாசன் உடன் இயக்குனர் கூட்டணி அமைத்தார்.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் உடன் கமல் இணைந்து பணியாற்றிய விக்ரம் திரைப்படம், மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்தது. இதன் தொடர்ச்சியாக, சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு படங்களை தயாரிக்கும் அவர், இளம் இயக்குனர்களின் கதையையும் கேட்டு வந்தார். இதில் ஹெச் வினோத்தின் கதை பிடித்துப் போனதால் அவருடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் அவர் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்தத் திரைப்படம் ராணுவ பின்னணியில் உருவாவதாகவும், விக்ரம் திரைப்படத்தை விட ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் விக்ரம் படத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலை நடிக்க வைக்க ஹெச். வினோத் திட்டமிட்டு இருக்கிறாராம். இதன் பெரும்பாலான காட்சிகள் சென்னையிலும், வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது. இதன் சூட்டிங் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





