- Advertisement -
Homeபொழுதுபோக்குஏ.ஆர்.ரஹ்மானை விட்டுவிடுங்கள் ப்ளீஸ்.. ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனர் கோரிக்கை

ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுவிடுங்கள் ப்ளீஸ்.. ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனர் கோரிக்கை

- Advertisement -

இசைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது இசையை ஆராதிப்பவர்கள் நிறைய பேர். எனவே ரஹ்மானும் உலகம் முழுவதும் பல இசைக்கச்சேரிகளை நடத்திவருகிறார். தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இசை கச்சேரி நடத்தினார்.

இந்தச் சூழலில் திரைத்துறையில் காலடி பதித்து 30 வருடங்கள் நிறைவானதை தொடர்ந்து மறக்குமா நெஞ்சம் என்ற கான்செர்ட்டை சென்னையில் நடத்தினார். அந்த கான்செர்ட்டை ஒழுங்கப்படுத்தும் பொறுப்பும் ஏசிடிசி என்ற ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முதலில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடப்பதாக இருந்த நிகழ்ச்சி மழை காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

- Advertisement -

அதன்படி சென்னை பனையூர் ஆதித்யாராம் பேலஸில் இந்த நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள், புதிதாக டிக்கெட் வாங்கியவர்கள் என்று கூட்டம் அலைமோதியது. 25,000 பேர்வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 47000 பேர்வரை வந்துவிட்டார்கள். இதனால் பலர் நிகழ்ச்சி நடந்த இடத்துக்குள்ளேயே செல்ல முடியாமல் திணறினர். மேலும் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முக்கியமாக பெண்களுக்கு பாலியல் சீண்டல் நடந்ததாகவும்; சில பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்துகொண்ட ரஹ்மான் விளக்கம் அளித்து டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருக்கிறார். இதுவரை 4000 மின்னஞ்சல்கள் வந்த சூழலில் 400 பேருக்கு பணத்தை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்க யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, பார்த்திபன், குஷ்பூ உள்ளிட்டோர் ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்துவருகின்றனர். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு வருத்தமோ, மன்னிப்போ கேட்காத சூழலில் அவருக்கு ஏன் சப்போர்ட் செய்ய வேண்டும் என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் ஏசிடிசி ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனர் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை நடத்துவதில் மட்டுமே ரஹ்மானுக்கு பொறுப்பு இருந்தது. அதனை அவர் சிறப்பாகவே செய்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இந்த சர்ச்சைக்கு முழுக்க முழுக்க ஏசிடிசி நிறுவனம் மட்டுமே காரணம். அதனால் ஏ.ஆர்.ரஹ்மானை யாரும் தாக்க வேண்டாம். நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களுக்கு அவர்களின் டிக்கெட் கட்டணம் கண்டிப்பாக திருப்பி கொடுக்கப்படும். அனைவரிடமும் நான் திறந்த மனதோடு மன்னிப்பு கேட்கிறேன். இனியும் ரஹ்மானை தாக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்