தமிழ் சினிமாவில் டார்க் ரக காமெடிகளை எடுப்பதில் வல்லவர் இயக்குனர் நெல்சன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை இயக்கி வந்த அவர், வெள்ளித் திரையில் சிம்புவின் வேட்டை மன்னன் திரைப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். ஆனால் அந்த திரைப்படம், முதல் பாதி சூட்டிங்கிலேயே நின்று போனது.
இதனால் சிறிது காலம் இயக்கத்தில் இருந்து சற்று விலகி இருந்த நெல்சன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா திரைப்படத்தை எடுத்தார். முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், வெற்றிக்கொடி நாட்டியது.
யோகி பாபுவின் காமெடி ஒரு பக்கம், நயன்தாராவின் அப்பாவித்தனம் இன்னொரு பக்கம் என கலந்து கட்டி அடித்து விருந்து படைத்திருந்தார் இயக்குனர் நெல்சன். இந்த படத்திற்குப் பிறகு, தனது நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தை நெல்சன் கொடுத்தார்.
எப்போதுமே கலகலவென்று இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அந்த படத்தில் சீரியஸ் ரோல் இருந்தது பலரையும் கவர வைத்தது. டார்க் காமெடி சரியான இடங்களில் ஒர்க் அவுட் ஆனதால், டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. சிவகார்த்திகேயனுக்கும் சரி, இயக்குனர் நெல்சனுக்கும் சரி இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
இதன் பிறகு, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கினார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளானார் நெல்சன். இப்படி துவண்டு கிடந்த நெல்சனுக்கு, ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. படம் கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய் வசூல் குவித்ததால், டோலிவுட் பாலிவுட் என பல இடங்களிலும் தேடப்படும் இயக்குனராக நெல்சன் அறியப்பட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தெலுங்கு நட்சத்திரம் அல்லு அர்ஜுனை சந்தித்திருக்கிறார். நெல்சனின் ஸ்டைல் அல்லு அர்ஜுனுக்கு பிடித்துப் போனதால், இருவரும் நீண்ட நேரம் உரையாடி இருக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது நெல்சன் கூறிய கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரும் விரைவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனுசுடன் நெல்சன் இணைய இருக்கும் நிலையில், தற்போது அல்லு அர்ஜுனுக்கும் கதை கூறி இருப்பதால் தமிழ் சினிமாவில் பிசியான இயக்குனர்கள் பட்டியலில் நெல்சன் இணைந்திருக்கிறார்.





