பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சீயான் விக்ரம், தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். பா ரஞ்சித் இயக்கும் இந்தத் திரைப்படம், கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
கோலார் தங்க வயல் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் பொங்கல் அல்லது மார்ச் மாதத்தன்று தங்கலான் திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரத்தின் ரிலீஸ் தேதியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரிது வர்மா, சிம்ரன், ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. இதன் பிரச்சனையை மெல்ல மெல்ல தீர்த்து வந்த கௌதம் மேனன், வரும் நவம்பர் 24 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, சீயான் விக்ரமின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் மலையாள இயக்குனரான ஆர் எஸ் விமல், விக்ரமுடன் இணைந்து மகாவீர் கர்ணன் படத்தை எடுக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். ஏற்கனவே இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆர் எஸ் விமல் ஏற்கனவே பிரித்விராஜை வைத்து ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அவரது கதை மிகவும் பிடித்துப் போனதால் சீயான் விக்ரமும், கர்ணன் படத்தில் நடிக்க சம்மதித்தார். இதற்கான டெஸ்ட் சூட்டிங் நடத்தப்பட்டது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் படத்தில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவே இல்லை.
இந்த நிலையில் தற்போதைய இயக்குனர் ஆர் எஸ் விமல், இதிகாச புராணமாக எடுக்கப்படும் கர்ணன் திரைப்படத்தின் டெஸ்ட் சூட்டிங் எடுக்கப்பட்ட வீடியோவை இப்போது வெளியிட்டு இருக்கிறார். இது விக்ரமுக்கு தெரியாமலேயே வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கரிகாலன் படத்திற்கும் விக்ரமுக்கு இதே போல் தான் நடந்தது. தற்போது கர்ணன் படத்திற்கும் விக்ரமின் அனுமதி இல்லாமல் வீடியோ வெளியாகியிருப்பதால், நடிகர் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.





