முதல் படத்தில் அறிமுகமாகும் ஒரு புதுமுக இயக்குநர், தனது படத்தில் ஒரு மொழியில் வெளியிடுவதுதான் வழக்கம். அல்லது, இரண்டு மொழிகளில் வெளியிட முயற்சிக்கலாம். ஆனால், இந்த பிரபல நடிகரின் மகன், இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படமே பத்து மொழிகளில் வெளியாக இருப்பது, சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். சமீபத்தில் அவரது லியோ பட இசை வெளியீட்டு விழா நடக்காதது, மிகப்பெரிய பேசுபொருளாக மாறிவிட்டது. சோஷியல் மீடியாவில் திரும்பிய பக்கமெல்லாம் இந்த பிரச்னையே ஓடி, ஓடி ஒருவழியாக அமைதி ஏற்பட்டுள்ளது.
லியோ இசை வெளியீட்டு விழா நடந்திருந்தால் கூட, படத்துக்கு இப்படி ஒரு பிரமோசன் கிடைத்திருக்காது. இந்த விழா நடக்காததற்கான பல காரணங்களை பலரும் கூறியதால், அதுவே படத்துக்கு தேவைக்கு அதிகமான ஒரு கவனத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. அதனால், இசை விழா நடக்காததும் கூட படத்துக்கு சாதகமான ஒரு விஷயமாகவே நடந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
இப்படிப்பட்ட பரபரப்பான ஒரு ஹீரோவான விஜய் மகன் ஜேசன் சஞ்சய், விரைவில் புதுமுக இயக்குநராக தமிழில் அறிமுகமாகிறார். லைகா புரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில், இவர் இயக்கும் படம், 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இது பலதரப்பட்ட மொழி பேசும் மக்களை சென்றடையும் வகையிலான யுனிவர்சல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜேசன் சஞ்சய், வெளிநாடுகளில் டைரக்ஷன் தொழில்நுட்பம் சார்ந்த உயர்ந்த படிப்புகளை படித்திருக்கிறார். சில குறும்படங்களை இயக்கியும் இருக்கிறார். அதனால், முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக, தமிழ் சினிமாவுக்கும் தனது அப்பாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக, தருவார் என்ற பேச்சு, கோலிவுட்டில் பரவி வருகிறது.
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் சிகரம் தொட்டு வருகிறார். அவரது அடுத்த படத்தில் சம்பளம் ரூ. 175 கோடி என்ற பேச்சு அடிபடுகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினியின் சம்பளம் 110 கோடி என்ற கூறப்பட்ட நிலையில், இனி அவரும் ரஜினி 171 படத்துக்கான சம்பளத்தை கணிசமாக உயர்த்த வாய்ப்புள்ளது. இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள விஜய் மகன் ஜேசன் சஞ்சய், அப்பாவை விட 16 அடி பாய தயாராகிறார் என்றே தெரிகிறது.





