தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக தற்போது இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்பட்ம மெகா ஹிட்டானது. அதனையடுத்து விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்தப் படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் லோகேஷ் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதற்கிடையே கடந்த ஐந்தாம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் விஜய் பேசிய கெட்ட வார்த்தை, ட்ரெய்லரில் இருந்த வன்முறை உள்ளிட்டவைகள் விமர்சனத்தையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றன. இருந்தாலும் லியோ ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். வெளியான 24 மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது ட்ரெய்லர்.
இந்நிலையில் படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடித்திருக்கின்றன. அதன்படி லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளை கொடுத்துவருகிறார். அப்படி அவர் கொடுத்த ஒரு பேட்டியில் ப்ரியா ஆனந்த்தின் கேரக்டர் குறித்து அவர் பேசியிருக்கிறார். அவர் ப்ரியா ஆனந்த் குறித்து பேசுகையில், “விக்ரம் படத்திலேயே ப்ரியா ஆனந்த்தை நடிக்க வைக்க திட்டமிட்டேன். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.
எனவே லியோ படத்தில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்தேன். அவர் இந்தப் படத்தில் கௌதம் மேனனுக்கு மனைவியாக நடித்திருக்கிறார்.” என்றார். முன்னதாக இந்தப் படத்தில் கௌதம் மேனன் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் கொடுத்த இன்னொரு பேட்டியில், “லியோ படத்தில் அந்த கெட்ட வார்த்தையை பேசித்தான் ஆக வேண்டுமா என விஜய் என்னிடம் கேட்டார். ஆனால் நாந்தான் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் தேவைப்படுவதால் பேசுங்கள் என்றேன். அதற்கு பிறகுதான் விஜய் அந்த வார்த்தையை பேசினார்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





