மன்சூர் அலிகான், தமிழ் சினிமாவில் எல்லோராலும் மதிக்கப்படுகிற, பாராட்டப்படுகிற ஒரு நல்ல நடிகர். சில படங்களை அவரே தயாரித்து, நடித்து இருக்கிறார். சினிமா துறையிலும், சமூகத்திலும் ஏற்படும் பிரச்னைகளுக்காக தைரியமாக குரல் கொடுக்கும் ஒரு சிறந்த மனிதராக இருக்கிறார்.
கேப்டன் பிரபாகரன் படம்தான், மன்சூர் அலிகானுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக, அவரது சினிமா பயணத்தில் அமைந்தது. இன்றும் அந்த நன்றிக்காக, விஜயகாந்த் மீது மிகப்பெரிய மரியாதை, அன்பு கொண்டராக மன்சூர் அலிகான் இருக்கிறார். சமீபத்தில் வந்த லியோ படத்திலும் முக்கிய கேரக்டரில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார்.
மதுபோதையால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை மையப்படுத்தி, மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்து, அவரே தயாரித்துள்ள படம் சரக்கு. இந்த படத்தில் பாக்யராஜ், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பல நடிகர், நடிகையர் நடித்துள்ளார். படம் நிறைவடைந்த நிலையில், சென்சார் அனுமதி சான்றிதழ் பெற சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, எனது சொந்த தயாரிப்பில், இருந்த கைக்காசை எல்லாம் போட்டு, இடத்தை வித்து எடுத்த படம் சரக்கு. படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பினோம். படத்தை பார்த்து விட்டு, நீண்ட நேரம் கலந்து பேசிவிட்டு என்னை அழைத்தனர். ஒரு நீண்ட லிஸ்ட் கொடுத்து, அதையெல்லாம் கட் செய்ய வேண்டும் என்கி்ன்றனர்.
இந்த படத்தில் அதானி, அம்பானி பெயர்கள் வருகிறது அதை நீக்க வேண்டும் என்கின்றனர். வேண்டும் என்றால், அவர்கள் என் மீது கேஸ் போடட்டும் என்றேன். கூடங்குளம் பெயர் வரக்கூடாது என்கின்றனர். கூடங்குளம் அநியாயத்தை கேட்கக் கூடாதா, இது உணர்வு. திருநங்கைகள் பாடல் வேண்டாம் என்கின்றனர். ஆனால், திருநங்கைகளை மேம்படுத்த, உயர்வுபடுத்தி தான் இந்த பாடல் காட்சி எடுக்கப்பட்ட இருக்கிறது.
சினிமா என்றால் கருத்து சுதந்திரம் வேண்டும். சென்சார்போர்டு, இதில் அவர்களது அடிமைத்தனத்தை காட்டுகின்றனர். காவாலா பாடலில், தமன்னா மிக செக்ஸியாக நடனமாடினார். அவர் நடனமாடிய விதமும், சைகைகளை செய்த விதமும் மிகவும் மோசமான மூவ்மெண்ட். அதை ஏற்றுக்கொண்டு அனுமதித்த சென்சார் போர்டு, சமூக கருத்துள்ள என் படத்தை ஏற்க மறுப்பது ஏன், என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.





