தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால், அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே, அவர்கள் சினிமாவில் நீடித்திருக்க முடியும். இல்லாவிட்டால், வீட்டிலேயே முடங்கி விட வேண்டிய நிலையே ஏற்படும். ஆனால் பல திறமையான நடிகர், நடிகையர் திறமை இருந்தும், நடிக்க வாய்ப்பின்றி காணாமல் போய் விடுகின்றனர்.
அதனால்தான் சில நடிகர், நடிகையர் நல்ல மார்க்கெட் இருக்கும்போது, தங்களுக்கு கிடைக்கும் கணிசமான வருமானத்தை வைத்து, சினிமா சாராத மற்ற தொழில்களில் முதலீடு செய்து விடுகின்றனர். சினிமா ஒரு காலகட்டத்தில் கைவிட்டாலும், அந்த தொழில்கள் கைவிடுவதில்லை. அதன்மூலம் வருமானத்தை பெற்று, வாழ்க்கையை வழக்கம்போல் வசதியாக கழிக்கின்றனர்.
ஆனால், ஒரு சில நடிகர், நடிகையர் சினிமாவை மட்டுமே நம்பி வாழும்போது ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்த நிலையில், படத்தில் நடிக்க வாய்ப்புகளே இல்லாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். துவக்கத்தில் இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த லிவிங்ஸ்டன், பூந்தோட்ட காவல்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல நல்ல கேரக்டர்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
கேப்டன் பிரபாகரன், பாட்டுக்கு நான் அடிமை, சுந்தரபுருஷன், விரலுக்கேத்த வீக்கம், சிவாஜி என பல படங்களில் நடித்த லிவிங்ஸ்டனை, பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. இதுகுறித்த சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் கூறுகையில், யாரும் நடிக்க கூப்பிடாததால், நான் படங்களில் நடிக்கவில்லை. பான் இந்தியா படங்கள் என்பதை பாக்யராஜ் அந்த காலத்திலேயே பண்ணி விட்டார். நல்ல கதை என்றால், அதற்கான அங்கீகாரம் மக்களிடம் கிடைக்கும். அனைத்து தரப்பு மக்களிடமும் பாக்யராஜ் படங்கள் பேசப்பட்டன.
சினிமா என்பது இப்போது கார்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது. ஆனால் நல்ல படங்களை ரசிகர்கள் வெற்றியடையச் செய்யாமல் விட்டதில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து, வல்கர் படம் என்றாலும் ஓடியது. நான் எடுக்கும் படமும் வல்கர் படம்தான். ஜனங்களுக்கு பிடித்த படமாக அது இருக்கும். அது வல்கரா, இல்லையா என்பதை ரசிகர்களே முடிவு செய்யட்டும்.
ஒரு பெரிய படத்தில் ஒரு பாட்டுக்கு செலவு பண்ற பணம்தான், என் படத்தோட பட்ஜெட். ஒண்ணேகால் கோடி ரூபாய் இருந்தால், என் படத்தை எடுத்துடுவேன். சப்ஜெக்ட்டை நம்பி படம் எடுக்கிறேன்.பிரமாண்டமாக படம் எடுக்க என்னிடம் பணம் இல்லை. மக்களுக்கு பிடித்ததை எடுக்கிறேன். சினிமா என்பது கமர்ஷியல் மீடியா. அது அப்படித்தான் இருக்கும். சினிமாவை திருத்த நீங்கள் முயற்சி பண்ணாதீங்க. மக்கள் ரசனைக்கேற்ப, என் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி படம் எடுக்கிறேன், எனக் கூறியிருக்கிறார் நடிகர், இயக்குநர் லிவிங்ஸ்டன்.





