இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல சர்ச்சைகளையும் சந்தித்து. பல சாதனைகளையும் செய்தது என்பதை மறுப்பதற்கில்லை. இது எப்போதுமே விஜய் படங்களுக்கு ரசிகர்கள் தரும் அமோக வரவேற்பாகவும், அவர் மீது கொண்டுள்ள அபரிமிதமான அன்பின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.
குறிப்பாக, லியோ டிரெய்லர் வெளியிட்ட 24 மணி நேரத்தில், 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, விஜயின் முந்தைய படத்தின் டிரெய்லர் சாதனையை தோற்கடித்தது. அதாவது, அவரது படமே, அவரது முந்தைய படத்தின் டிரெய்லர் பார்வையாளர் எண்ணிக்கைய முந்தியது. அதே போல், ப்ரீ டிக்கெட் புக்கிங் வகையில், ரூ. 20 கோடி ரூபாய் வரை வசூலானதாக கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி படத்தின் சிங்கிள் போஸ்ட், பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், பாடல்கள் என எது வெளியானாலும், அடுத்த சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் அது டிரண்டிங் ஆகி, பல மில்லியன்களை கடந்துவிடுகிறது. அதனால், லியோ படத்துக்கும் அதே போன்ற வரவேற்பை அளித்து ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நேற்று லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு தமிழ்நாட்டில் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், பாலக்காடு, ஆந்திராவில் உள்ள சித்தூர், கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அதிகாலை 4 மணி காட்சியை பார்த்துவிட்டு, ஊர் திரும்பியிருக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆனால், லியோ படத்தின் டிரெய்லர் ஏற்படுத்திய பரபரப்பு, மெயின் பிக்சர் ஏற்படுத்தவில்லை என்பதே ரசிகர்களுக்கு குறையாக உள்ளது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் படமாக, விஜய் படமாக இருந்தாலும் எதிர்பார்ப்பை இருவருமே பூர்த்தி செய்யவில்லை. லியோ படம் குறித்து, ரசிகர்களுக்கு ஏற்படுத்திய, திணித்த அதீத எதிர்பார்ப்பே எதிர்வினையாக மாறியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே லியோ ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்குமா, குறிப்பாக ஜெயிலர் படத்தின் வசூல் 700 கோடி ரூபாயை தாண்டுமா என்ற கேள்விகளுக்கு பதில் தந்துள்ள சினிமா விமர்சகர்கள், நிச்சயமாக லியோ ஆயிரம் கோடி வசூல் என்பது சாத்தியமே இல்லை, ரிபீட் ஆடியன்ஸ் வருகை பெரும்பாலும் இருக்காது. ஜெயிலர் சாதனையை லியோ, நினைத்துக்கூட பார்க்க முடியாது என கூறி இருப்பது, ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





