தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களை கொடுப்பதில் கில்லியாக திகழ்பவர் இயக்குனர் ஹரி. கே பாலச்சந்தர், சரண் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த அவர், நடிகர் பிரசாந்தின் தமிழ் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த திரைப்படம், ஹரிக்கு நல்ல பெயரையே பெற்றுக் கொடுத்தது.
இதன் பிறகு விக்ரமை வைத்து சாமி திரைப்படத்தை எடுத்து ஒட்டுமொத்த தமிழ் திரை உலகையும் திரும்பி பார்க்க வைத்தார் இயக்குனர் ஹரி. விறுவிறுப்பான திரைக்கதையை கொடுப்பதில் கெட்டிக்காரர் என பெயர் எடுத்த அவர், அடுத்தடுத்து திரைப்படங்களின் மூலம் கமர்சியல் படங்களின் கிங்காக மாறினார்.
கோவில், அருள், ஐயா, ஆறு என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்த ஹரிக்கு, மிகப்பெரிய பெயரை சம்பாதித்து கொடுத்தது தாமிரபரணி திரைப்படம். விஷால் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் காவியமாக மாறியது. தயாரிப்பாளரிடம் கொடுத்த தேதியில் சூட்டிங்கை முடிக்கும் இயக்குனராக ஹரி திகழ்ந்து வந்ததால் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன.
தொடர்ந்து கமர்சியல் திரைப்படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த அவர், சூர்யாவை வைத்து வேல், சிங்கம் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் அது ஓடாது என்ற பேச்சுக்கும், தனது சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார்.
கடைசியாக சிங்கம் 3, சாமி ஸ்கொயர் திரைப்படங்களை எடுத்து படுதோல்வியை சந்தித்த ஹரி, தனது மைத்துனர் அருண் விஜய் வைத்து யானை திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். தற்போது அவர் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் ஹரியின் தந்தையான கோபாலகிருஷ்ணன், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88. சில காலமாக உடல் நலம் சரியில்லாததால் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் ஹரி தந்தையின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியின் தந்தை மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





