சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க வேண்டும். அவருடன் சில வார்த்தைகளாவது பேச வேண்டும். அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என, தமிழ் சினிமாவில் ரஜினியை பார்த்து ரசிக்கும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். அதில் ஒரு சிலரது ஆசை நிறைவேறியும் விடுகிறது.
இதில் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கும் நடிகர், நடிகையரும் இதேபோல் ஆசையை கொண்டிருப்பதுதான் இதில் ஆச்சரியம். ஏனெனில், சினிமாவில் நடித்துவரும் துணை நடிகர்கள், துணை நடிகையர், படப்பிடிப்பு தொழில்நுட்ப பிரிவு சார்ந்தவர்கள் சினிமாவில் பணிபுரிந்தாலும், ரஜினி நடிக்கும் படத்தில் நடித்தாலோ, பணிபுரிந்தாலோ மட்டுமே ரஜினியை நேரில் சந்திக்க முடியும்.
ரஜினியுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளாகவே இருந்தாலும் அவர்கள் ரஜினியை சந்திக்க, பேச வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் ரஜினியின் மிக தீவிர ரசிகர்களாக உள்ள அவர்களது குடும்பம் சார்ந்தவர்கள் ரஜினியை சந்திக்க ஆசைப்பட்டாலும், அதற்கு அந்த நடிகரோ, நடிகையோ அனுமதித்தால் தான் உண்டு. ஏனெனில் இது ரஜினிக்கு தொல்லையாக மாறிவிட்டால், ரஜினியுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு பறிபோய்விடும் என்ற அச்சமும் இதில் மறைந்துள்ளது.
சமீபத்தில், நடிகர் லிவிங்ஸ்டனை வீட்டுக்கே வரவழைத்து உபசரித்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில், லிவிங்ஸ்டனும் நடித்திருக்கிறார். இதுபோல், ரஜினியுடன் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகையர் மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்திக்க நேரம் கேட்டு, அவர் அனுமதி தந்தால் அவரது வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்திப்பது வழக்கம்தான்.
ஆனால், நடிகர் லிவிங்ஸ்டனை சமீபத்தில் ரஜினியே, வீட்டுக்கு அழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வீட்டுக்கு வந்த லிவிங்ஸ்டனுடன் நீண்ட நேரம் பல விஷயங்களை பேசி இருக்கிறார் ரஜினிகாந்த். லிவிங்ஸ்டன் நடிப்பை மிகவும் ரசிப்பவர் ரஜினி. குறிப்பாக சிவாஜி, வீரா, அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் லிவிங்ஸ்டன் சில காட்சிகளில் நடித்திருந்தார்.
ரஜினியுடன் லிவிங்ஸ்டன் சந்திப்பு குறித்து சோஷியல் மீடியாவில் அவர்களது சந்திப்பு புகைப்படத்தை வெளியிட்டுள்ள லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடா, என் அப்பா லிவிங்ஸ்டனை ரஜினியே வீட்டுக்கு அழைத்து உபசரித்தது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அன்று படப்பிடிப்பு இல்லை என்றால், அன்று என் அப்பாவிடம் கெஞ்சி, அவருடன் சென்று ரஜினியை சந்தித்திருப்பேன். ஆனால், விரைவில் நான் அவரை சந்திப்பேன். என் அப்பா மீது நெருக்கமான அன்பும், நட்பும் கொண்டவராக ரஜினி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மீது கொண்டுள்ள அன்பும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என, குறிப்பிட்டு இருக்கிறார் ஜோவிடா.





