அஜித்குமார் தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துபாயில் நடைபெற இருக்கும் போட்டிக்காக அவர் தன்னை தயார் செய்து வருகிறார். இதற்காக அஜித்குமார் ரேசிங் எனும் நிறுவனத்தையும் தொடங்கி, அதில் கார் வீரர்களை இணைத்து பயிற்சி பெற்று வருகிறார்.
அண்மையில் அவர் தனது போசே காருடன் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இது ஒரு பக்கம் இருக்க, அஜித் குமார் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அவருக்கான போர்ஷன் அண்மையில் நிறைவடைந்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் திரிஷா பிரசன்னா அர்ஜுன் தாஸ் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தெலுங்கில் பட்டையை கிளப்பும் மைத்திரி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதன் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதேசமயம் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் பின்னணி இசையில் இருந்து விலக, தற்போது அதில் கவனம் செலுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அதிகம் இருப்பதால் இந்த நிலை என்று தெரிகிறது.
அதேசமயம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இதிலும் திரிஷா கதாநாயகியாக தான் நடித்திருக்கிறார். அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.
பிரேக் டவுன் என்னும் ஆங்கிலத் திரைப்படத்தை தழுவி தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்கான வேலைகள் சூடு பிடித்துள்ளன. அஜித் குமாரும் அண்மையில் தனது டப்பிங் பணிகளை முடித்து இருக்கிறார். ஏற்கனவே இதில் டீசர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.





