தமிழ் சினிமாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வந்த படங்களை திரும்பி பார்த்தால், அதில் 90 சதவீதம் ஆக்சன் படங்களாக மட்டுமே இருக்கின்றன. ஆக்சன் என்றால் சாதாரண ஆக்சன் அல்ல, படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளும், துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தங்களும் காதை கிழிக்கின்றன.
பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎப், கைதி, விக்ரம், மாஸ்டர், ஜவான், பதான், ஜெயிலர், லியோ, மார்க் ஆண்டனி, டாக்டர், துணிவு, வலிமை, லியோ என சமீபத்திய படங்கள் வரை ஆக்சன் படங்களாக இருக்கின்றன. சண்டை, சண்டை, வன்முறை என திரைமுழுக்க ஒருவரை ஒருவர் தாக்கும், ஒருவருடன் ஒருவர் மோதும் காட்சிகள் நிறைந்த படங்களாகவே இருக்கின்றன.
இப்போது திரைக்கு வந்த லியோ படமும் துவங்கிய சில நிமிடங்களில் இருந்து, என்ட் கார்டு போடும் வரை இரண்டே முக்கால் மணி வரை இரண்டு மணி நேரத்துக்கு மேல் படத்தில் இருப்பது சண்டை, சண்டை, சண்டை காட்சிகளாக மட்டுமே இருக்கின்றன. படம் விட்டு வெளியே வந்த பிறகும், பலருக்கும் அந்த சண்டை காட்சிகள் மட்டுமே நினைவில் இருக்கின்றன.
இப்போது வெங்கட்பிரபு எடுத்து வரும் விஜய் 68 படமும் ஆக்சன் படம் என்றே கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தின் சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் மகன் திலீப் சுப்பராயன்தான் இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கிறார். அதனால், இந்த படத்திலும் சண்டை காட்சிகள் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சினிமாவை டீன் ஏஜ் வயதினர் மட்டுமே பார்ப்பதில்லை. 10 வயதுக்குப்பட்ட குழந்தைகளும் பார்க்கின்றனர். பள்ளி மாணவ, மாணவியரும் பார்க்கின்றனர். குடும்ப பெண்மணிகளும், வயதானவர்களும் என அனைத்து தரப்பினருமே சினிமாவை விரும்பி பார்க்கின்றனர். ரசிக்கின்றனர். அனைவரும் விரும்பி பார்க்கும் ஜனரஞ்சக ஊடகம்தான் சினிமா.
ஆனால், வன்முறை சண்டை காட்சிகள், கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு ரத்தம் என, இன்னும் எத்தனை படங்கள் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வரப்போகின்றன எனத் தெரியவில்லை. முற்றிலும் உண்மையில்லாத, நடைமுறையில் நடக்காத இதுபோன்ற வன்முறை சினிமாக்களை இன்னும் எடுத்து எடுத்து மக்களுக்கு எனன வழிகாட்டுகிறது தமிழ் சினிமா. இதையே பார்த்து, அலுத்து நாளடைவில் விரக்தியும், அயர்ச்சியும், மன அதிருப்தியும் ரசிகர்களுக்கு வரும் நாள் வெகுதொலையில் இல்லை. அதற்குள் நம் தமிழ் சினிமா இயக்குநர்கள், தங்களது ஜானரை மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமாக, நேர்மையானதாக இருக்கும்.





