நடிகர் ரவி மோகனுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இதனை இயக்கியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்க நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றாலும் அது ரசிகர்கள் மத்தியில் நேரடியாக சென்று சேரவில்லை.
இப்படியான சூழலில் ரவிமோகன் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவருக்கு முழுக்க முழுக்க அரசியல் கலந்த திரைப்படமாக உருவாகிறது கராத்தே பாபு. டாடா திரைப்படத்தை கொடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்த கணேஷ் கே பாபு இதனை இயக்கி வருகிறார்.
இதே போல் ரவி மோகன் நடித்திருக்கும் ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி உட்பட 3 ஹீரோயின்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஃபேண்டஸி கலந்த கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஐசரி கணேஷ் இதனை தயாரித்துள்ளார். புவனேஷ் அர்ஜுன் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இதுபோக சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி இருக்கும், பராசக்தி திரைப்படத்திலும் ரவி மோகனுக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரவி மோகன் தனது அடுத்தடுத்து திரைப்படங்கள் குறித்து அப்டேட்களை அள்ளி வீசி இருக்கிறார்.
இதுகுறித்து பேசி இருக்கும் அவர், கராத்தே பாபு திரைப்படத்தில் நாங்கள் இறுதி கட்ட பணிகளை எட்டி விட்டோம். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் முழுக்க முழுக்க வித்தியாசமானதாக இருக்கும். எனது ரோலை நான் மாற்ற வேண்டும் என எண்ணியிருந்தபோது, இந்தப் பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது திரையுலக பயணத்தில் நிச்சயம் கராத்தே பாபு ஒரு மைல் கல்லாக இருக்கும்.
இதேபோல் ஜீனி திரைப்படத்திலும் சூட்டிங் பணிகள் நிறைவு பெற்று போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராபிக்ஸ் பணிகளும் செல்கின்றன. இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் விருந்தாக இருக்கும். பராசக்தி திரைப்படத்திலும் நான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். புதுமையான ரோலை தொட வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்று பேசியுள்ளார்.





